ஒரு நாள் கொண்டாட்டம் – 200 கோடி செலவு செய்த கட்சிகள்: மே தின நிகழ்வுகளுக்கு நிதி திரட்டப்பட்ட முறை தொடர்பில் கேள்வி

0
115

2024 ஆம் ஆண்டு மேதின கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்காக இலங்கையின் அரசியல் கட்சிகள் சுமார் 200 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

பணவீக்கச் சூழல் காரணமாக இந்த ஆண்டு மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு வரலாற்றில் அதிக பணத்தினை செலவிட நேரிட்டதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேதின கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வருவதற்கான போக்குவரத்துச் சேவைகளுக்காக செலவீனங்களை அரசியல் கட்சிகளே ஏற்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மேடை அமைப்பு, ஒலிபெருக்கி, அலங்காரம், உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்கும் பெருந்தொகை நிதி கட்சிகளால் செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, மேதின கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்காக பல அரசியல் கட்சிகள் நிதி பங்களிப்பை செய்ததாக கூறும் கட்சித் தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒப்புக்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி

இந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கொண்டாட்டத்திற்காக அதிகளவான பணம் செலவிட வேண்டியிருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டங்கள் நான்கு மாவட்டங்களில் நடைபெற்றதால் செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மேடை, ஒலிபெருக்கி, மின்விளக்குகள் மற்றும் சிறு சிறூ விளம்பரச் செயற்பாடுகளுக்கான செலவுகளை மாத்திரம் கட்சித் தலைமையகம் ஏற்கும் எனவும் ஏனைய அனைத்து செலவுகளையும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டாக ஏற்பார்கள் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ஏனைய பிரதான கட்சிகளும் பெருந்தொகை நிதியை செலவிட்டுள்ள நிலையில், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் மேதின கூட்டங்கள் மற்றும் பேரணிக்காக சுமார் ஒரு கோடி ரூபா வரை செலவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

சில கட்சிகளின் மேதின நிகழ்வுகளுக்கான செலவுகள் வர்த்தகர்களின் தலையில் கட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது.

நிதி திரட்டப்பட்ட முறைமை தொடர்பில் கேள்வி

இதனிடையே, மேதின நிகழ்வுகளுக்கு எவ்வாறு நிதியளிக்கப்பட்டது என்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரியுள்ளார்.

அத்துடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை காரணமாக தாம் எந்தவொரு மேதின பேரணியிலும் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தாம் செலவுகள் தொடர்பில் கவலைப்பட வேண்டியதில்லை என்றபோதிலும், மேதின நிகழ்வுகள் முழுவதுமே பணம் வீண்விரயமாக்கப்படுவதாக தோன்றுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஊழலைக் கையாள்வதில் பகிரங்கமாக ஆர்வமுள்ளவர்கள், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து கொழும்புக்கு மக்களை அழைத்துவர எவ்வாறு நிதி பெறப்பட்டது என்பதை விளக்க வேண்டுமென பேராசிரியர் சன்ன ஜயசுமன வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து இன்னும் இலங்கை மீளாத நிலையில், நாளொன்றுக்கு 200 கோடி ரூபாவை செலவு செய்துள்ளமையானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

பொருளாதார ரீதியில் அதலபாதாளத்தில் உள்ள இலங்கை முற்றிலும் பயனற்ற மற்றும் பொருத்தமற்ற மேதின நிகழ்வை நடத்தியிருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றது.