இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் 6 மாதங்களைக் கடந்து நடந்துவரும் நிலையில், பணயக்கைதிகள் இருவர் பேசுவது போன்ற வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. அதில், அவர்கள் குண்டுவீச்சுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறுவதைக் காண முடிகிறது.
இது ஒருபுறமிருக்க, ஹமாஸிடம் உள்ள பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 12,000 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 250 பேர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதில் ஏற்கனவே 105 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேல் சிறையில் உள்ள பாலத்தீன கைதிகளை விடுவிப்பது, ஒரு வார போர் நிறுத்தம் ஆகிய கோரிக்கைகளை உள்ளடக்கிய இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, இவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். இன்னும் 133 பணயக்கைதிகள் காஸாவில் இருப்பதாகவும், அதில் 30 பேர் இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், பணயக் கைதிகள் ஒம்ரி மிரான் மற்றும் கீத் சீகலின் ஆகியோர் பேசுவது போன்ற காணொளியை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸுடன் ஒப்பந்தத்துக்கு உடன்படுங்கள் என்றும் இஸ்ரேலிய அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே, பணயக்கைதிகளை விடுவிக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி தலைநகர் டெல் அவிவில் இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.