இறுதிப் பயணத்தை ஒன்றாக முடித்த நண்பர்கள்: தியத்தலாவ விபத்தில் பதிவான சம்பவம்

0
29

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.’ என்பது முதுமொழி. மனிதர்களாக பிறக்க அதிர்ஷ்டம் பெற்ற நாம் ஒரு நாள் விரும்பியோ விரும்பாமலோ நம் வாழ்க்கை பயணத்தை முடிக்க வேண்டும். இது இயற்கையின் விதி.

ஆனால் அது எப்போது ​​எப்படி என்பது நம் கையில் இல்லை. இதனை தியத்தலாவ விபத்தில் நடந்த அவலம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

மிகவும் குறுகிய எங்களது வாழ்க்கையில் பலரை நாம் சந்திக்கின்றோம் அதில் சிலர் மட்டுமே நம்முடன் கடைசி வரை தொடர்கின்றனர். இவ்வாறான ஒரு சம்பவம் தியத்தலாவ நரியாகந்த விபத்தில் பதிவாகியுள்ளது.

மாத்தறை பிரதேசத்தில் பிறந்து பாலர் கல்வி தொடர்ந்து மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் ஒரே வகுப்பில் கற்று பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த பின்னர் பாடசாலை விடயங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஏனைய சமூக விடயங்கள் போன்றவற்றில் ஒன்றாக ஈடுபட்டு வந்த இரு நண்பர்களான கணேஷ் கமலநாத் ஜயவர்தன (61) மற்றும் அருணசாந்த உபாலி கமகே (62) இருவரும் கார் பந்தயம் தொடர்பில் காணப்பட்ட ஈடுபாடு காரணமாக மாத்தறையிலிருந்து தியத்தலாவ நரியாகந்த சென்றுள்ள நிலையில் அங்கு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ள செய்தி பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இவர்களின் தேகங்களும் ஒரே இடத்தில் ஒன்றாக வைக்கப்பட்டிருந்தன. காரணம் இறுதி நேரத்திலும் முறியாத நட்பைப் பேண வேண்டும் என்பதே.

இருவரின் சடலங்களும் இறுதி ஊர்வலத்தில் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ஆறு தசாப்தங்களாக நண்பர்களாக இருந்த இருவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் மாத்தறை பொது மயானத்தில் தங்கள் கடைசி பயணத்தை ஒன்றாக முடித்தனர்.