உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதாரங்களை நாடாளுமன்றில் முன்வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் 24ஆம் திகதியன்று முற்பகல் 10.30 முதல் மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட தகவலின் உண்மையை கண்டறியுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய அறிக்கை இராஜதந்திர மட்டத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என நீதவான் சுட்டிக்காட்டினார்.
குறித்த அறிக்கையின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும் வரை வாக்குமூலத்தின், இரகசியம் பேணப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கடந்த 22ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தற்போது வரை பேசுபொருளாகவே காணப்படுகின்றது.
“குண்டுத் தாக்குதல்களை நடாத்தியது யாரென எனக்குத் தெரியும்” என அவர் அறிவித்ததையடுத்து கடந்த 22ஆம் திகதி கண்டியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் கடந்த 25ஆம் திகதி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தது.
அந்த அறிக்கை தொடர்பிலான வாக்குமூலத்திற்கு கடந்த 28ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் அனுமதி வழங்கினார். இதனையடுத்து “மீண்டும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” யென அவர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இந்த வழக்கு விசாரணை நேற்றுமுன் தினம் எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து, மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கைக்கமைய பல தொலைபேசி இலக்கங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் வாக்குமூலம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.