திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் வருகையை சீனா தடுத்து வருவதாக இலங்கையின் அமரபுர மகா சங்க சபையின் தலைவரான வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் அவர் வருவதை சீனா அதை விரும்பவில்லை.
சீனா எங்கள் அரசாங்கத்திற்கும் எதிராக அழுத்தம் கொடுக்கின்றது. அது எங்களுக்கு பிடிக்கவில்லை. தலாய் லாமா ஒரு பௌத்த தலைவர். அவர் வியாபாரி அல்ல. அவருக்கு முழுமையான சுதந்திரம் உள்ளது” என வஸ்கடுவ மகாநாயக்க தேரர் கூறியுள்ளார்.
இலங்கையில் இருந்து உயர்மட்ட பிக்குகள் தலாய் லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் சீனா அழுத்தம் கொடுத்து வருகின்றது. எனவே எதிர்காலத்தில் அவர் இலங்கைக்கு வருகை தந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.” என தெரிவித்துள்ளார்.