அக்டோபர் ஐந்தாம் தேதி ஜனாதிபதித் தேர்தல்?: சஜித் அணியின் கோரிக்கை என்ன?

0
113

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறுமென ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துமாறு மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 5 ஆம் திகதி நடத்துவதென முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் பரிந்துரைத்திருப்பதாகவும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

கட்சிகளின் அபிப்பிராயங்கள்

ஜனாதபதித் தேர்தலை நடத்துவது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட சிறிய கட்சிகளின் அபிப்பிராயங்களை ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பெற்றிருந்தது.

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டுமென பிரதான அரசியல் கட்சிகளும் சிறிய கட்சிகளும் மற்றும் சில பொது அமைப்புகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருந்தன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவை முன்னர் சந்தித்துப் பேசியிருந்தபோதும் எந்தத் தேர்தலை நடத்துவது என்பதில் குழப்பமான நிலைமை காணப்பட்டிருந்தது.

இப் பின்னணியில் பசில் ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். பேசப்பட்ட விடயங்கள் இன்று வெள்ளிக்கிழமை காலைவரை ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

தேர்தல்கள் ஆணைக்குழு

ஆனாலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான தனது முடிவையும் ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய அரசியல் கூட்டணியில் பொதுவேட்பாளராகத் தான் போட்டியிடவுள்ளமை பற்றியும் எடுத்துரைத்தாக உள்ளக்கத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த வேண்டாமென தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.