பசிலின் பொறிக்குள் சிக்கப் போகும் ரணில் – சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் இலங்கையில் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மகிந்த தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையை தனக்கு சாதகமான பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் ரணில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த மாதமளவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என அரசியல் மட்டத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனினும் ரணிலை அதிகாரத்திற்கு கொண்டு வந்த மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியினர் தமது வெற்றியை உறுதிப்படுத்தும் தீவிர செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் ஆதரவு
முதற்கட்டமாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தி, மக்கள் மத்தியில் தமக்கு உள்ள செல்வாக்கினை நாடிபிடித்து பார்க்க ராஜபக்சர்கள் விரும்புகின்றனர்.
இதன் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதியிடம் வலுவாக முன்வைத்துள்ளது.
இது தொடர்பான அடுத்த நகர்வுகளை முன்னெடுக்கும் நோக்கிலேயே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நாடு திரும்பியுள்ளார்.
பொதுஜன பெரமுன அரசாங்கமே தற்போது செயற்பட்டு வருகிறது. எமது கோரிக்கையை நிறைவேற்றுவதே ரணில் கடமை என்ற கருத்தை பசில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணில் நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றால், 2020 ஆம் ஆண்டு போலவே, அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் கணிசமான பெரும்பான்மையைப் பெறக்கூடும் என்று பசில் குறிப்பிட்டுள்ளார்.
சமநிலையான நாடாளுமன்றத்திற்கு, பொதுத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பசில் தெரிவித்தார்.
ராஜபக்சர்களுக்கு சார்பாக செயற்பட்ட பல விசுவாசிகள் தற்போது ரணிலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதற்கான பல்வேறு ஒப்பந்தல் திரைமறைவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ரணிலின் நகர்வு
ராஜதந்திரத்தில் நரி என அடையாளப்படுத்தும் ரணில், தமிழ் கட்சிகளை சிதைத்து வலிவிழக்கச் செய்தமை போன்று, தற்போது ராஜபக்சர்களின் பொதுஜன பெரமுன கட்சியை பல பிளவுகளை உடைத்துள்ளார்.நரிக்கு எதிர் நரி என்ற ரீதியில் ரணிலின் ராஜதந்திரங்களை உடைத்து பொதுஜன பெரமுவுக்கு வலு சேர்க்கும் திறைமறைவு காய்நகர்த்தல்களை பசில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.