புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை: நீதி கோரி போராட்டம்!

0
130

தொழிநுட்ப ரீதியாக உலகம் முன்னோக்கி சென்றுக்கொண்டிருக்கும் அதேவேளை பெண்களுக்கெதிரான வன்புனர்வுகளும் , சிறுவர் துஷ்பிரியோகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி இன்றி தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன. அண்மையில் புதுச்சேரியில் இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியுள்ள நிலையில் கேட்போர் மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி சோலைநகர் பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுமியான ஆர்த்தி கடந்த 2ஆம் திகதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நிலையில் எந்த பதிவும் கிடைக்காத காரணத்தினால் பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்ததையடுத்து குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

சோதனையிட்ட பொலிஸார் வாய்க்காலில் வேட்டியால் கட்டிய மூட்டை ஒன்றினுள் காணாமல் போன சிறுமியின் உடல் இருப்பதை கண்டறிந்தனர்.

காணாமல் போன சிறுமியை கொலை செய்து கை, கால், வாயை கட்டி மூட்டையாக வீசியிருந்தமை தெரியவந்தது. சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீதி கோரி ஆங்காங்கே பல ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

புதுச்சேரி சிறுமி படுகொலை விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன? என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் புதுச்சேரி மாநில அதிமுக எதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி நாளைய தினம் (08.03) குறித்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று இருவர் இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருணாஸ் (19) என்ற இளைஞரும், விவேகானந்தன் (59) என்ற முதியவரும் கைதாகியுள்ளதாக தெரிகிறது. இவர்களில் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியை தேடிவந்ததாக சொல்லப்படுகிறது.