அரச ஊழியர்களின் அடுத்த சம்பள உயர்வை பத்து வருடங்களில் வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024 இல் அதனை வழங்க முடிவு செய்தோம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதன்படி ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு 10,000 ரூபா வழங்கப்படும் என அதிபர் சுட்டிக்காட்டினார்.
மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நேற்று (29) நடைபெற்ற “அஸ்வெசும” வேலைத் திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அஸ்வெசும திட்டம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
“கடந்த ஆண்டு முதல் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். இத்திட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது என்பதை அறிய இன்று வில்கமுவவிற்கு வந்தேன்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாடு வங்குரோத்தடைந்த தருணத்தில் தான் நான் அதிபர் பொறுப்பை ஏற்றேன். அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற எந்தத் தலைவரும் முன்வரவில்லை.
இத்தகைய வங்குரோத்து சூழலில், மக்கள் தங்கள் தொழில்களை இழந்து, பல நெருக்கடிகளை எதிர்கொண்டனர். எனவே, நாட்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்
அதன்படி நாட்டை பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தோம். அதன்பிறகு, மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில், “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்தோம்.
அரச ஊழியர்களின் சம்பளம்
அதன்படி அஸ்வெசும மூலம் சமுர்தித் திட்டத்தை விட மூன்று மடங்கு உதவிகளை மக்களுக்கு வழங்க முடிந்தது. இதன்படி, அஸ்வெசும நிவாரணம் தேவைப்படும் அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.
கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளைக் கண்டறிந்து செயற்படுவதன் மூலம் இந்த திட்டம் வெற்றியளித்துள்ளது. நம் நாட்டில் சுமார் 16 இலட்சம் சமுர்த்திப் பயனாளிகள் இருந்தனர். ஆனால் நிவாரணப் பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கிறோம்.
மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு 10,000 ரூபா வழங்கப்படும்.
2015ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி வகித்த போது அரச ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தேன். அடுத்த சம்பள உயர்வை பத்து வருடங்களில் வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024 இல் அதனை வழங்க முடிவு செய்தோம்.
‘உறுமய’ திட்டம்
மேலும் நாங்கள் ‘உறுமய’ திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். 1935 ஆம் ஆண்டு முதல் காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் காணி உரித்து பெற்ற அனைவருக்கும் ‘உறுமய’ திட்டத்தின் கீழ் முழுமையான காணி உரிமையைப் பெறுவர்.
சட்டப்பூர்வ உரிமை கிடைப்பதால், மக்கள் நீண்டகாலமாக சந்தித்து வந்த பிரச்சினை தீரும். உறுமய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பத்து இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்படும்.
இந்த அனைத்து வேலைத் திட்டங்களின் கீழும் மக்களுக்குப் பாதுகாப்பான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், பிரதேச செயலகங்களுக்கு அதிகளவான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி
மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும். இப்போது நாட்டின் பொருளாதாரம் சாதகமான வளர்ச்சியைக் காட்டுகிறது.
எனவே, இந்த மாகாணத்தில் வருமான வழிகளை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலாப் பிரதேசமாக இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும். நவீன விவசாயம் மற்றும் ஏற்றுமதிக்கான பலசரக்குப் பொருள் கைத்தொழிலை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கொக்கோ மற்றும் கோப்பித் தோட்ட அபிவிருத்திக்கு புதிய முதலீட்டாளர்களுடன் புதிய தோட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாத்தளை மாவட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.