இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, வடக்கு மாகாணத்தில் “நட்பின் சிறகுகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் தொடர்ச்சியான திட்டங்களை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் மார்ச் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, முன்முயற்சியின் ஒரு பகுதியாக, வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு, 125 மில்லியனுக்கும் அதிகமான நிதி மதிப்புடன் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள 73 பாடசாலைகள் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புக்காக அடையாளங்காணப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திறைசேரிக்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்: வெளியான புதிய அறிக்கை
நன்கொடை நிதி
சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 25 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் பாடசாலைகளுக்கு 73,000 பள்ளி புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.
அத்துடன், இந்தத் திட்டங்களுக்கு அரச நிதி பயன்படுத்தப்படாது என்றும், அனைத்து நிதியும் நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்படும் என்றும் விமானப்படைத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.
விமானப் படையின் கண்காட்சி
இதேவேளை, மார்ச் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை ஆண்களுக்கான 650 கிலோமீற்றர் தூர ஈருருளி சவாரி, காலி முகத்திடலில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நிறைவடையும். அதேவேளை, பெண்களுக்கான போட்டி 100 கிலோமீற்றர் தூரத்துக்கு நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, விமானப்படையானது மார்ச் 6 முதல் 10 வரை யாழ்ப்பாணத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை நடத்தவுள்ளது.
இதன்போது, இந்திய விமானப்படை மற்றும் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தி மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடத்தப்படும் என்றும் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.