ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் மிக நுட்பமான சட்ட முறைகளைப் பயன்படுத்தி தனது பதவி காலத்தை நீடிக்கும் உத்திகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாள்வதாக தெரிகிறது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க வேண்டும் என்பதில் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், பதவிக்கு வரும் எவரும் அந்த அதிகார முறையை நீக்க முற்படுவது இல்லை.
இதனை பயன்படுத்தி ரணில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த திட்டமிடுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்தால், அதனை எந்த ஒரு அரசியல் கட்சியும் எதிர்க்க முடியாத சூழல் ஏற்படும்.
பதவிக்காலம் நிறைவு
ஆனாலும், ரணிலின் ஜனாதிபதிக்குரிய பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைவதனால், அதற்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது என எவரேனும் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
அவ்வாறு, வழக்கு தாக்கல் செய்தால் சர்வஜன வாக்கெடுப்பை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிடும். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் தீர்ப்பு வெளியாகக் குறைந்தது ஒரு வருடமாவது செல்லும், என்று சட்ட வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
எனவே, ரணிலின் ஜனாதிபதிக்குரிய பதவி காலமும் குறைந்தது ஒருவருடமேனும் நீடிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். அவ்வாறு நீடித்தால் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி கட்சிகள் வகுக்கும் வியூகங்களும், ஜே.வி.பி முன்னெடுக்கும் புதிய அணுகுமுறைகளும் செயல் இழக்கும் நிலை ஏற்படலாம் என்று ரணில் கருதுகின்றார் போலும்.
இவ்வாறான அரசியல் காய் நகர்த்தல்களை இரவு பகலாக வகுக்கிறார் என்றும் தனக்கு சாதகமான சட்ட நிபுணர்களுடன் உரையாடி வருவதாகவும் தெரிய வருகின்றது.
அமெரிக்க, இந்திய அரசுகள் ரணில் விக்ரமசிங்கவை கைவிட்டதாக கூறப்படும் நிலையில், சீனாவின் மறைமுக ஆதரவுடன் செயற்படும் ரணில், முடிந்த வரை தன் அரசியல் அனுபவங்களையும், உள்ளக வெளியக இராஜதந்திர நுட்பங்களையும் கண கச்சிதமாக கையாளுகிறார் என்பது புரிகின்றது.
அமெரிக்க-இந்திய அரசுகள் ஜே.வி.பியை வேறு ஒரு வியூகத்தில் கையாளும் அதேநேரம் சஜித் பிரேமதாச தலைமையிலான அரசியல் கூட்டணி உருவாக்கத்திற்கும் பின்புலமாக இருக்கின என்பதை மறுப்பதற்கு இல்லை.
அமெரிக்கா சொன்னது என்ன?
சஜித்தை மீளவும் அழைத்து ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் என்ன என்று ரணிலிடம் அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான இராஜதந்திரி ஒருவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தொலைபேசியில் உரையாடியிருந்தார்.
அதன் பின்னரே சஜித் பிரேமதாசவை மையப்படுத்தி சில கட்சிகள் உடன்படிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை கைச்சாத்திட்டன என்ற அவதானிப்புகளும் உண்டு.
இந்த நெருக்கடியான அரசியல் நிலைக்குள் தனிமைப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, வகுக்கும் வியூகங்கள் எந்த அளவு தூரம் வெற்றி அளிக்கும் என்பதை அனுமானிக்க முடியாது.
ஏனெனில், ரணிலுக்கு நெருக்கமாக இருந்த வெளிநாட்டு முதலிட்டாளர்கள் மற்றும் இலங்கைதீவுக்குள் இருக்கும் பிரபல வர்த்தகப் பிரமுகர்கள் பலருடனும் மிகச்சமீப காலத்தில் முரண்படுகின்றார் என்ற கதைகளும் கசிந்துள்ளன.
சீனாவின் இராஜதந்திரம் வெற்றியளிக்குமா?
ஆகவே, சீனாவின் இராஜதந்திரம் வெற்றியளிக்குமா? அல்லது அமெரிக்க இந்திய அரசுகளின் காய்நகர்த்தல்கள் இலங்கைதீவுக்குள் சாத்தியமாகுமா என்பதை எதிர்வரும் மாதங்களில் வெளிப்படவுள்ள புவிசார் அரசியல் போக்குகளை அவதானித்தே எதிர்வு கூறமுடியும்.
ஆனாலும் எவருமே எதிர்பாராத விதமாக ரணில் இறுதி நேர மாற்று உத்திகளைக் கையாண்டால், நிலைமைகள் வேறுவிதமாகவும் மாறலாம்.
ஏனெனில், ரணில் என்ற புத்திசாலி அமெரிக்க, இந்திய அரசினால் முற்றும் முழுவதுமாக ஒதுக்கப்படும் நபர் அல்ல, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் ரணில் மீது துறைசார் இராஜதந்திர (Highly Diplomatic Strategy) நம்பிக்கை இல்லாமல் இல்லை.
ஆகவே, எல்லோரையும் திருப்திபடுத்தக் கூடிய அவரின் இறுதிநேர மாற்று உத்தி வெற்றியளிக்குமாக இருந்தால், இந்தோ – பசிபிக் விவகாரம் உட்பட இலங்கைதீவின் அரசியல்-பெருளாதார செயல்முறைகள் அனைத்தும் வேறுவகையாக மாறக் கூடிய நிலைமை உண்டு..