கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஏழு பேர் நாடு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர் கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் இந்திய மத்திய அரசு தலையிட்டதுடன் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம், மரண தண்டனையை சிறை தண்டனையாகக் குறைத்தது. தொடர்ந்து அவர்களை இந்தியா அழைத்துவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின பலனாக இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலையான 7 பேர் விமானம் மூலம் இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
“பிரதமர் மோடியின் தலையீடு இல்லாமல் நாங்கள் தாயகம் திரும்புவது சாத்தியப்பட்டிருக்காது. இந்திய அரசின் தொடர் முயற்சியினாலேயே நாங்கள் இங்கே இருக்கிறோம்” என விடுதலையானவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கத்தாரின் அல் தஹாரா குளோபல் என்ற தனியார் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்த இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அரசாங்கம் கத்தார் நாட்டின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. விடுவிக்கப்பட்ட 8 பேரில் 7 பேர் நாடு திரும்பியுள்ளனர். அவர்களை விடுவித்து இந்தியா திரும்புவதை சாத்தியப்படுத்திய கத்தார் அரசினை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Delhi: Qatar released the eight Indian ex-Navy veterans who were in its custody; seven of them have returned to India. pic.twitter.com/yuYVx5N8zR
— ANI (@ANI) February 12, 2024