விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராகத் தமிழர்கள் தரப்பில் இனி எவருமே வர முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் மாவீரர் தினத்தன்று வே. பிரபாகரனின் புதல்வி பேசுவதாக சமூக வலைதளத்தில் வெளியான காணொளி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
“தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவதாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி வெளியான காணொளி போலியானது. அந்தப் போலி காணொளிக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கும் என்று என்னால் கூற முடியாது.
இதேவேளை தொடர்பு இல்லை என்றும் என்னால் கூற முடியாது. இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளது என்பது நூறு வீதம் உண்மை.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் தலைவர் பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டனர். அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்ய முடியாது. அது அவர்களை அவமானப்படுத்தும் செயல்.
மேலும் தலைவர் பிரபாகரனின் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. எனினும் அவர் நேர்மையான ஒரு தலைவர், இறுதி வரை தன் இனத்திற்காக போராடிய ஒரு தலைவர்” என அவர் கூறியுள்ளார்.