சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். மத அனுஷ்டானங்களுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நீண்டகாலமாக வெற்றிடமாக காணப்பட்ட பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (29) நியமனம் செய்யப்பட்டார்.
இதன்படி மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த தேசபந்து தென்னகோன் 03 மாத காலத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றவுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பில் அரசியலமைப்புச் சபைக்கு அறிவிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனிடையே பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப்பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நியமனம் அவமானம் என கத்தோலிக்க திருச்சபை கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்ட இந்த நியமனம் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கண்டனம் தெரிவித்துள்ளதுடன் திருச்சபை அதனை வன்மையாக எதிர்ப்பதாகவும் அருட்தந்தை சிறில் காமினி குறிப்பிட்டுள்ளார்.