குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பிற நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், சமணா்கள், பாா்சிக்கள் மற்றும் பெளத்த மதத்தைச் சோ்ந்தவா்கள் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி 2014ஆம் ஆண்டு டிசம்பா் 31ஆம் திகதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறி இருந்தால் அவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சிஏஏ வழிவகை செய்யும்.
அடுத்த ஆண்டு மாா்ச் 30க்குள் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) இறுதி வரைவு தயாராக வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ரா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று(புதன்கிழமை) மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் தர்மதாலா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
“மேற்கு வங்கத்திற்கு பிரதமர் மோடி இலட்சங்கள், கோடிகளை அனுப்புகிறார். ஆனால் அது ஏழைகளுக்குச் சென்றடையவில்லை. இந்த ஆட்சியில் மேற்குவங்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? அரசியல் வன்முறைகள் நின்றுவிட்டதா? ஊழல் நின்றுவிட்டதா?
2026இல் மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், 2024 மக்களவைத் தேர்தலில் அதற்கு அடித்தளம் அமைக்கப்பட வேண்டும்.
18 மக்களவைத் தொகுதிகளையும் 77 பேரவைத் தொகுதிகளையும் வழங்கிய மேற்கு வங்க மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கு வங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான். எங்கள் கட்சியின் சுவேந்து அதிகாரியை முதல்வர் மம்தா பானர்ஜி சட்டப்பேரவையில் இருந்து இரண்டு முறை இடைநீக்கம் செய்தார்.
நீங்கள் அவரை இடைநீக்கம் செய்யலாம். ஆனால் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். உங்கள் காலம் முடிந்துவிட்டது என்று மக்கள் சொல்கிறார்கள் என்று மம்தாவிடம் சொல்லிக்கொள்கிறேன்.
மேற்கு வங்கத்தில் ஊடுருவல் அதிகம் உள்ளது. இவ்வளவு ஊடுருவல் நடந்தால் மாநிலத்தில் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதனால் தான் மம்தா சிஏஏவை எதிர்க்கிறார். சிஏஏ என்பது நாட்டின் சட்டம். அதை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள் அதை கண்டிப்பாக செயல்படுத்துவோம். சிஏஏ சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவை“ என்றும் அவர் கூறியுள்ளார்.