மாவீரர் நாளான இன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரக என குறிப்பிடும் பெண் ஒருவர் ஆற்றியுள்ள கொள்கைப் பிரகடன உரை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
மாவீரர் நாளில் பிரபாகரனின் மகள் துவாரகா, யூ டியூப் காணெளி ஊடாக கொள்கைப் பிரகடன உரையாற்றுவார் என சமூக ஊடகங்களின் வழி தகவல்கள் வெளியாகியிருந்தன.
அந்த அறிவிப்பின்படி, குறிப்பிட்ட நேரத்தில் யூ டியூப் காணொளி ஊடாக பிரபாகரன் மகள் துவாரகா எனக் குறிப்பிடப்பட்ட பெண்மணி உரையாற்றியுள்ளார்.
சுமார் பத்து நிமிடங்கள் வரை நீடித்துள்ள இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்கள் மிகவும் வைரலாகியுள்ளது. இந்த காணொளி குறித்த செய்திகளுக்கு இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
“உலகத் தமிழ் உறவுகளுக்கு நன்றி“
“இலங்கைப் படையினர் தோல்வியுறும் தருணங்களில் எல்லாம் பிற நாடுகளின் சக்தி வாய்ந்த நாடுகள் தலையிட்டு இலங்கைக்கு உதவின. இதன் தொடர்ச்சியாக புலிகள் இயக்கத்திற்கு நாடுகள் தடை விதித்தன.
சுதந்திரத்துக்கான போராட்டம் முற்றுப் பெறவில்லை. புறநிலைச் சூழல்கள் அனைத்தும் அப்படியேதான் இருக்கின்றன. பண்பாட்டுச் சீரழிவுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன. சகலமும் சிங்களமயமாக்கப்படுகின்றன.
அனைத்து சுதந்திரங்களும் பறிக்கப்படுகின்றன. மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எம் மக்கள் குரல்வளை நசுக்கப்பட்டவர்களாக வாழ்கிறார்கள்.
எமது பிரச்சினையில் தலையிட்ட சக்திவாய்ந்த நாடுகள் அரசியல் தீர்வை வழங்கவில்லை. ஐ.நா. போன்ற அமைப்புகளும் நீதியைப் பெற்றுத் தரவில்லை.
ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும் அரசியல் போராட்டம் உயிர்ப்போடு இருப்பதற்கு இதுவே காரணம். சுதந்திரத்துக்கான எமது போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நாம் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து, அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.” என உரை நிகழ்த்தினார்.
தாய்த் தமிழக உறவுகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்த அவர் அனைவரும் உறுதுணையாக நின்று குரல் கொடுப்பார்கள் என்றும் குறித்த காணொளியில் தோன்றிய பெண் தெரிவித்துள்ளார்.
பழ.நெடுமாறனின் சர்ச்சைப் பேச்சு
இதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் விரைவில் பொது வெளியில் தோன்றுவார் எனவும் தமிழகத்தின் பழ.நெடுமாறன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இலங்கை அரசாங்கம் அதற்கு கடுமையான மறுப்பு தெரிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில், மாவீரர் நாளில் பிரபாகரனின் மகள் பொது வெளியில் தோன்றுவார் என அண்மைய நாட்களில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்த பின்னணியில் தற்போது இந்த காணொளி வெளியாகியுள்ளது.
இந்த காணொளியில் ஊடாக பேசியது பிரபாகரனின் மகள் துவாரகா தானா என்பது இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
AI தொழில்நுட்பத்தின் மூலம் முயற்சி
எவ்வாறாயினும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருக்கிறார் என காண்பிப்பதற்கான காணொளியொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் இலங்கைப் புலனாய்வு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.
மாவீரர் தினத்தை முன்னிட்டு இந்த காணொளியை வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இதற்காக பிரபாகரனின் உறவினர்களின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு நிதியை திரட்ட திட்டமிட்டிருப்பதாவும் இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு சர்வதேச புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என போலியாக ஒருநபரை அடையாளம் காட்டி நிதி வசூல் நடைபெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.