பலஸ்தீன – இஸ்ரேல் நெருக்கடி தொடர்பாக 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட அதன் பிரதி இலங்கைக்கான பலஸ்தீன தூதுவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் பலஸ்தீனம் – இஸ்ரேலுக்கு இடையில் காஸா பகுதியில் கடும் போர் இடம்பெற்று வருகிறது.
காஸா பகுதியை மையமாக கொண்டு இயங்கும் ஹமாஸின் கடைசி பயங்கரவாதியை ஒழிக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லையென இஸ்ரேல் அறிவித்துள்ள பின்புலத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு உலகில் பல நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக வைத்தியசாலைகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு அமெரிக்காவில் இருந்துகூட கண்டனங்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் இலங்கை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் மிலேச்சத்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அங்கு மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஐ.நாவை வலியுறுத்தும் கோரிக்கை கடிமொன்று இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்களால் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை கடிதத்தில் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். இந்த தொகையானது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமாகும். இதன்மூலம் இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆதரவு பலஸ்தீனத்துக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.