யாழ் நடேஸ்வராக் கல்லூரியை முன்னேற்ற ஒன்றுசேரும் பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளை

0
197

யாழ் நடேஸ்வராக் கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு நடேஸ்வரன்கள் அனைவரும் இணைந்து செயற்படுவது மிக முக்கியமானது என்றும், போரினாலும் போதிய வசதிகள் இன்றியும் நலிவுற்று இருக்கும் பிரதேசத்தில் இருக்கும் மக்களின் பிள்ளைகளின் கல்வித்தரத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவது பழைய மாணவர்களின் கடமை என்று கூறுகின்றது, நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை.

இது தொடர்பாக நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை செயலாளர் தேவராசா காண்டீபன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,  

1901 இல் காங்கேசன்துறையி்ல் ‘English Elementary School’ மற்றும் ‘Hindu Tamil School’ என இரண்டு பாடசாலைகள் உருவாக்கப்பட்டிருந்தன. அவை இரண்டும் 1945 இல் இணைக்கப்பட்டு ‘நடேஸ்வரக் கல்லூரி’ தோற்றம் பெற்றது.

வளம் நிறைந்த யாழின் வலிகாமத்தில் கல்வியிலும் விளையாட்டிலும் முத்திரை பதித்த ஒரு பாடசாலையாகப் பின்னாளில் மிளிரத் தொடங்கி இருந்தது. வளர்ச்சியில் ஏறுமுகம் கண்டு வந்த பாடசாலை 1987, 1990 போர்களில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் மிகவுமே பாதிக்கப்படத் தொடங்கியது.

1990 இல் இடம்பெயர்ந்து சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் இயங்கியது. வலிகாம மக்கள் இடப்பெயர்வுக்கும் புலப்பெயர்வுக்கும் உட்பட்டமையால் அண்ணளவாக 1600 வரை கல்வி கற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 200க்குள் அடங்கிப் போனது! அதன் பின்னரும் பல இடங்களில் தற்காலிகமாக இயங்கிய பாடசாலை 2016 வரை தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவு வைத்தியசாலையில் இயங்கியது. 2016 இல் காங்கேசன்துறைக்கு எமது பாடசாலை மீள் குடி கொண்டது.

இடம்பெயர்ந்த பின்னர் பல தடவைகள் மூடப்படும் தறுவாயில் இருந்த பாடசாலையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றமைக்கு புலம் பெயர் தேசங்களில் முதன் முதலாக 1997இல் ஐக்கிய இராச்சியத்தில் உருவாக்கப்பட்ட நடேஸ்வரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மிகப் பெரிய பங்கினை வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அண்மையில் திறந்து வைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்குப் பெரிய பாலமாக அமைந்து வருகின்றது. இன்னும் பல திட்டங்கள் மூலம் பாடசாலையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு நடேஸ்வரன்கள் அனைவரும் இணைந்து செயற்படுவது மிக முக்கியமானது ஆகும்! போரினாலும் போதிய வசதிகள் இன்றியும் நலிவுற்று இருக்கும் பிரதேசத்தில் இருக்கும் மக்களின் பிள்ளைகளின் கல்வித்தரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவது பழைய மாணவர்களாகிய எமது கடமையாகும்!

பாடசாலையின் வளர்ச்சிக்காக நிதி சேகரிக்கும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் பழைய மாணவர் சங்கத்தினால் 28/10/2023 அன்று ‘நடேஸ்வரன் இரவு’ நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! அனைவரையும் அந்நிகழ்வுக்கு வந்து எமது பாடசாலையின் வளர்ச்சிக்குக் கைகொடுத்து உதவுமாறு கேட்டு நிற்கின்றோம்!

Gallery