தமிழ் தரப்புகளை சந்திக்கும் ஜனாதிபதி ரணில்: முக்கிய விடயம் தொடர்பில் பேச்சு

0
294

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.

நாளை மறுதினம் (18.07.2023) இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குமாறும், குருந்தூர்மலை விவகாரம் மற்றும் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் விவகாரத்தில் ஜனாதிபதியிடம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி எவ்விடயங்களை வலியுறுத்தவேண்டும் என்பது குறித்து தமிழ்த் தேசிய கட்சிகள் கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதுடன் இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமது நிலைப்பாடுகளை நேரடியாகவும் அறிவித்துள்ளன.

சமஷ்டி முறையிலான தீர்வு

அதன்படி, ஜனாதிபதியிடம் சமஷ்டி முறையிலான தீர்வையே இந்தியா வலியுறுத்தவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தவேண்டுமென ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியாக இந்திய உயர்ஸ்தானிகரிடம் கடிதங்களைக் கையளித்துள்ளன.

தமிழ் தரப்புகளை சந்திக்கும் ஜனாதிபதி ரணில்: முக்கிய விடயம் தொடர்பில் பேச்சு | Tamil Arasu Kachchi Ranil Wickremesinghe Meeting

மேலும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தில் கையெழுத்திடாத இலங்கைத் தமிழரசுக்கட்சி, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துமாறு இந்தியப்பிரதமர் மோடி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு முன்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இவ்வாரம் நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பு நாளை மறுதினம் பி.ப 3 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் இச்சந்திப்புக்கு ஜனாதிபதியே அழைப்புவிடுத்திருப்பதாக தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.