இத்தாலி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் பெடரிகோவையும் நாடாளுமன்றம் அழைத்து வந்திருந்தார்.
நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே நாடாளுமன்றம் அமைதியானது. எனினும் குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்து கொண்ட எம்.பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார்.
இவரின் செய்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியதோடு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
“அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பது இதுவே முதல்முறை. பெடரிகோவுக்கு நீண்ட சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம்” என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். பெண் எம்.பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டது.