கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் அவரின் இந்த குற்றச்சாட்டை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தரப்பு நிராகரித்துள்ளது . சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குமாரசிங்க,
சங்கடப்படுத்தும் நோக்கம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க, திடீரென சமுர்த்தி மானியம் தொடர்பில் சில கேள்விகளை தன்னிடம் கேட்டதாகவும் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தான் தயாராக இல்லை என்று கூறிய போது சபாநாயகர் தம்மிடம் பேசிய விதம் தனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை விட்டு வெளியேறிய போது, பெண்கள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக நான் நியமிக்கப்பட்டேன். நான் தற்காலிக அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டதை அவர் (ஜெயதிலக்க) அறிந்திருந்ததால், என்னை சங்கடப்படுத்தும் நோக்கத்தில் அவர் அத்தகைய கேள்வியைக் கேட்டதாக கீதா குமாரசிங்க குறிப்பிட்டார்.
இதன்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரேம்நாத் டொலவத்த ஆகியோரால் ஜயதிலக்க கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் வற்புறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சமூக வலுவூட்டல் அமைச்சராக இருந்த போதிலும், சரியான தரவுகளைப் பெறாமல் அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது தவித்தபோது , சபாநாயகர் என்னை ‘ஹோல்மானக்’ (பேய்) என்ற வார்த்தையைப் பயன்படுத்திக் குறிப்பிட்டார்.
சபாநாயகரின் அந்த வார்த்தை எவ்வளவு அசிங்கமாகவும் அவமானமாகவும் இருந்தது? நாடாளுமன்றத்தில் 12 பெண் எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். அப்படியானால் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது பெண்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் வெளியே பெண் அதிகாரிகளின் கழுத்தை பிடிக்கும் பொலிஸ் அதிகாரிகள், இங்கு சபாநாயகர் பெண் எம்.பி.க்களின் கழுத்தை பிடிக்கிறார். இது சர்வதேசத்திற்கு செல்ல வேண்டிய பிரச்சினை.
இருப்பினும், இதுபோன்ற விஷயங்களால் எனது அரசியல் பயணத்தை நிறுத்த மாட்டேன். நான் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தில் பிரவேசித்த உறுப்பினர் அல்ல, மக்களால் தெரிவு செய்யப்பட்டவள் எனவும் கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்தார்.
சபாநயகரின் ஊடகச் செயலாளர் மறுப்பு
அதேவேளை சபாநயகரின் ஊடகச் செயலாளர் இந்துனில் யாப்பா அபேவர்தன இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், சபாநாயகர் குமாரசிங்கவுக்கோ அல்லது வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கோ அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார் .
அத்துடன் சபாநாயகர் “ஹோல்மன் வெல” (திகைப்பு) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், குமாரசிங்கவிடம் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டபோது அவர் திகைத்து நின்றதாகத் தோன்றியது.
இந்நிலையில் நடந்த சம்பவத்தை சில தரப்பினர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகக் கூறிய அவர் , குமாரசிங்கவிற்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.