சீன உர ஒப்பந்தத்தால் அரசாங்கத்திற்கு பெரும்நட்டம்

0
331

சர்ச்சைக்குரிய சீன உர ஒப்பந்தத்தால் அரசாங்கத்திற்கு நூற்று முப்பத்தெட்டு கோடியே இருபது இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக வழக்குத் தொடரவும், சீன கிண்டாவோ சீவின் பயோடெக் நிறுவனத்தை இலங்கையில் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் பரிந்துரைத்துள்ளார்.

சீனாவின் கிங்டாவோ நிறுவனத்திடமிருந்து 96,000 மெற்றிக் தொன் கரிம உரங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நடத்தப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையை வெளியிட்டு கணக்காய்வாளர் நாயகம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

நாட்டில் இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதன் பின்னர் இயற்கை உரங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக சீனாவின் Kindao Sewin Biotech நிறுவனத்திடம் இருந்து இந்த இயற்கை உரங்களை இறக்குமதி செய்ய கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கைக்கு சீனாவால் பெருமதிப்பிலான தொகை நட்டம்! | Sri Lanka Has Lost A Lot Of Money To China

விவசாய அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இரண்டு அரசாங்க உர நிறுவனங்கள் சீன உரங்களில் தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியா இருப்பதாக ஆய்வக சோதனைகள் உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், குறித்த கரிம உரங்களை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை எவ்வாறு திறந்துள்ளனர் என்பதை கணக்காய்வு அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

பின்னர், 20,550 தொன் சீன கரிம உரத்தை கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்க முயற்சித்த போதிலும், அது தாவர தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிரானது என சர்ச்சைக்குரிய சூழ்நிலை உருவானது,

அந்த கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில், கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தது. கப்பலின் மொத்த செலவில் 75% அல்லது 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டது.

இதன்படி, இந்த கொடுக்கல் வாங்கல் மூலம் அரசாங்கத்திற்கு 1,382 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவித உத்தரவாதமும் இன்றி முன்பணம் செலுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த பரிவர்த்தனையில் ஈடுபட்ட பொறுப்புள்ள நபர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர்களிடமிருந்து பணத்தை மீட்டெடுக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

மேலும் விநியோக நிறுவனம் இலங்கையின் சட்டதிட்டங்களின்படி செயல்படாததால் இலங்கையில் கறுப்புப் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.