இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சூகா (Yasmin Sooka) விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் சட்டமா அதிபர் லூசியன் வான் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் நாட்டு சட்டப்படி ராஜபக்ச எந்த குற்றமும் செய்யவில்லை என்பதே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ராஜபக்ச மீதும் இலங்கை அரசாங்கமும் இன்டர்போல் அமைப்பும் எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும் சிங்கப்பூர் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அதேசமயம் கோட்டாபய தொடர்பில் 63 பக்கங்கள் கொண்ட புகாரை முன்வைத்து யாஸ்மின் சூகா (Yasmin Sooka) சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் அவசர முறைப்பாடு செய்திருந்தார்.
இதேவேளை, சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியின் தலைவர் கென்னத் ஜெயரட்னமும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தனது உறவினர்களைக் கொன்றதாக சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.
எனினும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. அதேசமயம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனும் அந்தச் சட்டத்தினால் காப்பாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.