10 ஆயிரம் பேருக்கு பசளைகளை வழங்காது போனால், வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து 300 முதல் 400 ரூபாவுக்கு விற்பனை செய்ய நேரிடும் என கமத்தொழில், பசளை மற்றும் பெருந்தோட்டத்துறை சம்பந்தமாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை கண்டறிய பிரதமர் நியமித்த குழுவின் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற குழுவின் கூட்டத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவின் கடன் யோசனை முறையின் கீழ் இலங்கைக்கு 65 ஆயிரம் மொற்றி தொன் யூரியாவை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 40 ஆயிரம் மெற்றி தொன் நெல் பயிர் செய்கைக்கும், 20 ஆயிரம் மெற்றி தொன் சேனை பயிர் செய்கைக்கும் வழங்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் அகில விராஜ் கூறியுள்ளார்.
அதேவேளை நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி பிரச்சினை காரணமாக, நெல், காய்கறி, பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பயிர்களுக்கான விதைகள் போதுமான அளவில் இல்லை.
விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை கமத்தொழில் துறையில் மிக முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.