தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி பவணி இன்றைய தினம் திங்கட்கிழமை (16) மன்னாரை வந்தடைந்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமானது. இதன் போது வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் குறித்த நினைவேந்தல் ஊர்தி சென்று முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் 5 ஆவது நாளான இன்று திங்கட்கிழமை(16) குறித்த ஊர்தி மன்னாரை வந்தடைந்துள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அஞ்சலி இடம் பெற்றது. தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி இடம் பெற்ற ஊர்திப்பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி நிதிகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.