இலங்கை தமிழர்கள் தொடர்பில் மீண்டும் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்

0
294

இலங்கையில் நிலவும் பாரிய பெருளாதார நெருக்கடியில் அங்கிருக்கும் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறு கோரியும், அவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில்,

“உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள இந்தத் தருணத்தில்,

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வருவோருக்கும் பொருட்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு உறுதியோடு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “இலங்கையில் நிலவும் இத்தகைய மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தர வேண்டும்” என்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் (23-3-2022) கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டபூர்வ உதவிகளை உறுதி செய்திடுமாறு முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.