பசில் ராஜபக்சவிடம் இருந்து நிதி அமைச்சை பறிமுதல் செய்ய வேண்டும்-முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

0
527

பசில் ராஜபக்சவிடம் இருந்து நிதி அமைச்சை பறித்து, அவருக்கு வேறொரு அபிவிருத்தி அமைச்சு பதவியை வழங்கவும். அதேபோல நாட்டை கண்காணிக்கும் பொறுப்பை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்க வேண்டும் என அபயராக விகாரையின் பிரதான விகாராதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe Ananda Thero) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31ஆம் திகதி அபயாராமயவில் மஹா சங்கத்தினர் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், 

மரணமடையாதவர்களின் வீட்டிலிருந்து கடுகு விதையை கொண்டு வருமாறு கோதமியிடம் சிசா சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதேபோன்று தற்போது வருத்தமடையாத வீட்டில் இருந்து ஒரு கோப்பை நீர் கொண்டு வருமாறு நானும் இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த நாட்டு அப்பாவி ஏழை மக்களுக்கு இவ்வாறான வலியை ஏற்படுத்த இந்த அரசாங்கம் தயாராக இருந்தால் நாமும் பாத யாத்திரையாக சென்று இந்த அரசாங்கத்தை உடனடியாக அனுப்ப வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்ல நேரிடும் என்பதனை தயக்கத்துடன் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் மேற்பார்வையையும் மீண்டுமொருமுறை பொறுப்பேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கோட்டபாய ராஜபக்ச அரச தலைவராக செயற்படுவார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு வேறு ஒரு அபிவிருத்தி அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும். அதற்கான படிகள் என்ன என்பது தொடர்பில் 31ஆம் திகதி மகா சங்கத்தினர் அபயராமயவில் கலந்து கொண்டு தீர்மானம் எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.