வட கொரியா மீண்டும் தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (Intercontinental ballistic missile) பரீட்சித்துள்ளது.
வட கொரியாவினால் 2017 ஆம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரீட்சிக்கப்பட்டுள்ளதாக தென் கொரியாவும் ஜப்பானும் தெரிவித்துள்ளன.
குறித்த ஏவுகணை 1100 கிலோமீட்டர் பயணித்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் ஜப்பான் கடற்பரப்பில் வீழ்ந்துள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது ஒரு நிலையான பாதையில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கவல்லது என்பதுடன், கோட்பாட்டளவில் அமெரிக்காவையும் அது சென்றடையக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.
வட கொரியா கடந்த சில வாரங்களாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது ஐந்தாண்டுகளுக்கு முந்தைய ஏவுகணையைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததும் 6000 கிலோ மீட்டர்களுக்கும் அதிக தூரம் பயணிக்கக்கூடியதுமென ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.