பொருளாதார பிரச்சினையிலிருந்து இலங்கையை பிணை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்- எம்.ஏ.சுமந்திரன்

0
389

கடுமையான பொருளாதார பிரச்சினையிலிருந்து இலங்கையை பிணை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகிவிட்டது என்பதைத்தான் அரச தலைவருடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் வெளிப்படுத்துகிறது.

என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரச பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நேற்றைய தினம் (25) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் உறவினர்கள் அமைப்பு இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அவ் அமைப்பினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களுக்கென பிரத்தியேகமாக அரசியல் பிரச்சினை ஒன்றோ, அல்லது அன்றாடப் பிரச்சினைகளோ இருப்பதாக சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரல்ல.

அதனால்தான் அரச தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு இரண்டரை வருடங்கள் சென்றுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதை அவர் தவிர்த்து வந்திருந்தார். தான் தனித்து சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என்பதை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளான காணி அபகரிப்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விவகாரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட விடயங்களில் சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தும் கூட, எந்தவிதமான நகர்வையும் முன்னெடுக்க அரசாங்கம் அக்கறை காட்டவில்லை.

பதிலாக மிருசுவிலில் தமிழ் மக்களைப் படுகொலை செய்தமைக்காக மரண தண்டனைக்குள்ளான சிங்கள படை அதிகாரி ஒருவரை தமது அதிகாரத்தைப் பாவித்து மன்னிப்பளித்து விடுதலை செய்தார். குமாரபுரம் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அரசாங்கம் எவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அணுகும் என்பதற்கு இவை இரண்டும் மட்டுமல்ல மேலும் பல உதாரணங்கள் உள்ளன. இப்போது பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, சிங்கள மக்கள் கொதித்தெழுந்து வீதிகளில் இறங்கியுள்ள நிலையில், மேற்கு நாடுகளின் உதவி அரசாங்கத்துக்கு அவசரமாகத் தேவையாகவுள்ளது.

இல்லையெனில் மக்கள் கிளர்ச்சி ஒன்று வெடிக்கலாம் என்பதும், எதிரணிகள் அதனைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதும் அரசுக்கு எச்சரிக்கையாகவுள்ளது. இந்தப் பின்னணியில் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

கடந்த வாரம் கொழும்பு வந்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலான்ட், அரசதலைவருடனான சந்திப்பின் போதும் இதனை வலியுறுத்தினார். அத்துடன், புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்தப் பின்னணியில்தான், இரண்டரை வருடங்களாக கூட்டமைப்புடன் பேச்சை தவிர்த்து வந்த அரச தலைவர் அவசரமாக அவர்களைப் பேச்சுக்கு அழைத்தார். கூட்டமைப்பும் எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சுக்கு சென்றிருக்கின்றது.

இது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமாகவுள்ள மேற்கு நாடுகளின் உதவியைப் பெறுவதற்காக கோட்டாபய ராஜபக்ச அரசு போடும் நாடகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் துணைபோகின்றதா என்ற கேள்வியைத்தான் எழுப்புகின்றது.

அந்தியச் செலாவணிப் பிரச்சினையிலிருந்து இலங்கையை பிணை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகிவிட்டது என்பதைத்தான் இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

காணி அபகரிப்பு தொடர்பில் தெரியாத ஒருவராகவா அரச தலைவர் இதுவரை இருந்துள்ளார்? 2010 இற்கும் 2015 இற்கும் இடைப்பட்ட காலத்தில் அரச தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச அரசுடன் 18 சுற்றுப் பேச்சுக்களை கூட்டமைப்பு நடத்தியது. அப்போது பேசப்பட்ட விடயங்கள்தான் வெள்ளிக்கிழமை கோட்டாபயவுடன் நடந்த பேச்சுக்களின் போதும் பிரஸ்தாபிக்கப்பட்டன.

இவை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்பது போல அரச தலைவர் சொல்வது முற்றுமுழுதாக ஒரு நாடகம். அதனை நம்புவது போல, வெளியே வந்து கூட்டமைப்பின் பேச்சாளர் சொல்லும் தகவல்கள் சர்வதேச சமூகத்திடமிருந்து அரசைப் பாதுகாக்க கூட்டமைப்பு தயாராகிவிட்டது என்பதை பகிரங்கப்படுத்துகின்றது.

தமிழர்களுடைய அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் புலம்பெயர்த்த தமிழ் அமைப்புக்களை தடை செய்துவிட்டு தமக்கு சார்பான சில அமைப்புக்களுடன் பேசுவதற்கான திட்டம் ஒன்றுடன்தான் அரசு செயற்படுகின்றது.

புலம்பெயர் தமிழர்களின் நிதியை வரவழைப்பதே இந்த சதியின் நோக்கம். இதற்கும் கூட்டமைப்பு துணை போவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தாயகத்திலும், புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு செயற்படுவார்கள் என நாம் நிச்சயமாக நம்புகிறோம். என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.