காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை அண்மையில் யாழில் வைத்து தடுத்து நிறுத்தி பல அநியாயங்களை செய்த காவல்துறை அராஜகம் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி நா.ஆஷா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறிலங்கா பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது எமது உறவுகள் அவரை அங்கு சந்திப்பதற்காக சென்றிருந்தனர். ஆனால் இராணுவத்தினரும் காவல்துறையினரும் பேருந்தை மறித்து பல வழி வகைகளில் பெண்கள் முதியவர்களை காயப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த நாட்டில் எமக்கும் சரியான உரிமை கிடைக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதற்காக தொடர்ந்தும் போராடுவோம், நீதிப் பொறி முறை ஒன்றை எதிர்பார்க்கிறோம் இதனால் தான் சர்வதேச விசாரணை நீதிப்பொறி முறை தேவை என்பதை வலியுறுத்திக் கூறுகின்றோம்.
பெண்கள் பூ போன்றவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மூன்று பேருந்துகளில் சென்ற வேளையில் தடுத்து நிறுத்தி முல்லைத் தீவு, வவுனியா தலைவர் செயலாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலைக்கு சென்ற போதும் காவல்துறையினர் அவர்களை அங்கு சென்று முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறும் கூறி வெளியேற்றினார்கள்.
எங்கள் உறவுகளுக்கான நீதியை தான் கேட்கிறோம் இந்த ஒரு இலட்சம் பணம், காணி, மரண சான்றிதழ் தேவையில்லை. உறவுகள் எங்கே என்பதை தான் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.
இதற்கு அரசாங்கம் தான் பதில் கூற வேண்டும் இல்லாது போனால் எமது போராட்டங்கள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.