அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கொழும்பு மாநகர சபைக்கு அறிவிப்பு

0
400

வருடாந்த வரவுசெலவுத்திட்டத்துக்கு சமாந்தரமாக 01/2014 ஆம் இலக்க அரசாங்க நிதி சுற்றுநிருபத்தின் ஆலோசனைக்கு அமைய முறையான செயற்திட்டமொன்றுக்கு அனுமதி பெற்று அதற்கமைய செயற்பட வேண்டும் என அரசங்க கணக்குகள் பற்றிய குழு கொழும்பு மாநகர சபைக்கு வலியுறுத்தியது.

2020 மற்றும் 2021 வருடங்களுக்கான முறையான செயற்திட்டமொன்றுக்கு அனுமதி பெறாமல் செயற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மூலம் புலப்பட்டுள்ளதால் இந்த நிலையை இல்லாமல் செய்வதற்கு துரிதமாக செயற்படவேண்டும் என குழு இதன்போது வலியுறுத்தியது.

கொழும்பு மாநகர சபையின் 2017/2018 ஆண்டின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய நிலைமைகளை ஆராயும் வகையில் அண்மையில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் இடம்பெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தின் போதே இந்த விடயங்கள் புலப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டதாவது, திறைசேரியினால் 2020 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விடயம் கொவிட் நிலைமை காரணமாக பிரயோகரீதியாக செயற்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். எனினும் இந்த நிலைமையை சரிசெய்து 2022 ஆம் ஆண்டிலிருந்து முறையான செயற்திட்டமொன்றுடன் செயற்படுமாறு குழு சுட்டிக்காட்டியது.

மாநகர சபையின் வருமான நிலுவை தொடர்பிலும் குழு இதன்போது கவனம் செலுத்தியதுடன், அது தொடர்பில் ஆழமாகக் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் தினமொன்றில் மீண்டும் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்போது மாநகர சபையின் கடந்த ஆண்டுகளுடன் தொடர்புடைய அனைத்து வருமானம், செலுவுகள், வருமான நிலுவை மற்றும் பொதுமக்கள் நன்கொடைகள் தொடர்பிலான தகவல்கள் மற்றும் புள்ளிவிபரங்களை குழுவுக்கு சமர்பிக்குமாறும் அரசாங்க கணக்குகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கு ஆலோசனை வலனாக்கினார்.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ லசந்த அழகியவண்ண, வைத்திய கலாநிதி சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரன்வீர், பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, அஷோக் அபேசிங்க, நிரோஷன் பெரேரா, எஸ். ஸ்ரீதரன், ஹேஷா விதானகே, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி, வீரசுமான வீரசிங்க, பி.வை.ஜி. ரத்னசேகர மற்றும் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.