ரணிலுடன் இணையும் ஐ.மக்கள் சக்தியின் 10 எம்.பிக்கள்: அமைச்சர் மகிந்தானந்த

0
371

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாவிடம் இருக்கும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் 10 பேரும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் உணவு பிரச்சினை சம்பந்தமாக கேள்வி ஒன்றை எழுப்பிய போதே அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் அளுத்கமகே மேலும் தெரிவிக்கையில், ‘எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே. நான் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளவர்களின் பெயர்களை கூறவா?. அவர்களின் பெயரின் முதல் எழுத்துக்களை மாத்திரம் கூறுகிறேன்.

ஹ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஒருவர்.ஏ எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் ஒருவர், ர எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் ஒருவர், ச எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் ஒருவர். தற்போது அந்த பெயர்களை பார்த்துக்கொண்டால் நல்லது” என தெரிவித்துள்ளார்.

இதன் போது, குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா, “ நான் மாத்திரமல்ல. எமது முழு அணியும் அந்த பக்கம் வரும்” எனக் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, “அது பகல் கனவு. நிதியமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள இவர் தற்போது முச்சக்கர வண்டியில் செல்கிறார்” என தெரிவித்துள்ளார்.