பொறுப்புக்கூறல் பொறிமுறையை உள்நாட்டில் உருவாக்குவதாக இலங்கை அரசாங்கம் கூறி காலங்கடத்திவரும் நிலையில், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும் நம்பிக்கை வைப்பது உண்மைகள் மறைக்கப்படுவதற்கே வழிவகுக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் தப்பித்துக்கொள்வதற்கும் இது காரணமாகலாம். அதனால், இலங்கையின் கபட நோக்கங்களைப் புரிந்துகொண்டு, பொறுப்புக் கூறலிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்ள முடியாத வகையில், உறுதியான அணுகுமுறை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கையாள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உறவினர்கள் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை முன்னிலைப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் கபட நாடகத்தை புரிந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச விசாரணை ஒன்றை இலக்காகக்கொண்ட நகர்வை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உடனடியாக முன்னெடுப்பது அவசியமாகும்.
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மக்களுடைய நம்பகத் தன்மையைப் பெறவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையிலும் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே நாம் அனுப்பிய கடிதத்தில் இது தொடர்பாக குறிப்பிட்டிருந்தோம். மனித உரிமைகள் ஆணையாளரினால் அது புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றது.
ஆனால், அந்த அலுவலகத்தில் சில ஆட்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்மூலமாக அந்த நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாக ஆணையாளர் சொல்ல முற்படுகின்றார். ஏதோ ஒரு வகையில் அந்த அலுவலகத்தின் மீதான நம்பிக்கையை ஆணையாளர் முற்றாக இழந்துவிடவில்லை என்பதை அவரது இந்தக் கருத்து வெளிப்படுத்துகிறது.
இந்த அலுவலகம் தவறான பாதையில் சென்றுகொண்டிருந்தது என்பதை நாம் ஆரம்பத்திலிருந்தே தெரிவித்துவந்திருக்கின்றோம். மேற்கு நாடுகளும், மனித உரிமைகள் பேரவையும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தொடர்பில் தொடர்ந்தும் நம்பிக்கை வைத்திருந்தன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கிய எழுத்து மூலமான ஆவணங்கள், காணொலிப் பதிவுகள் என்பன இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் மீதான நம்பிக்கையில்தான் அவை வழங்கப்பட்டிருந்தன. இருந்த போதிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்பதையோ அல்லது, அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதையோ கண்டறிவதற்கு அந்த ஆவணங்களை காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் பயன்படுத்தவில்லை.
பதிலாக, சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதற்கே அந்தப் பட்டியல் பயன்படுத்தப்படுகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இதற்கான அழுத்தங்கள் அதிகளவுக்குக் கொடுக்கப்படுவதாக ஆதாரபூர்வமான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என சுமார் 17 ஆயிரம் பதிவுகள் இருக்கும் நிலையில், 4 ஆயிரம் பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் கூறியிருந்தது.
இதனை மேலும் குறைப்பதை நோக்கமாகக்கொண்டே மரண சான்றிதழ் வழங்குவதாகவும், நட்ட ஈடு வழங்குவதாகவும் அரசாங்கம் சொல்லிக்கொள்கின்றது. அழுத்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் இதனை ஏற்றுக்கொண்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையும். இலங்கை அரசாங்கத்தின் இலக்கும் அதுதான்.
கடந்த திங்கட்கிழமை (14-03-2022) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாவை நட்ட ஈடாகக் கொடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு லட்சம் ரூபாவையும், மரண சான்றிதழ்களையும் கொடுப்பதன் மூலமாக, இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டதாக சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக்கொள்வதற்கு அரசு திட்டமிடுகின்றது.
இதன்மூலம் ஜெனிவாவிலும், சர்வதேசத்திலும் உருவாகும் அழுத்தங்களை நீர்த்துப்போகச் செய்துவிடலாம் என்பது அரசின் கணக்கு. மறுபுறம், அழுத்தங்கள் மூலமாக உறவுகளைப் பணியவைத்து மரண சான்றிதழ்களைக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என அரசு திட்டமிடுகிறது.
அரசாங்கத்தின் இந்த கபட நோக்கத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை துணைநிற்பதாகவே நாம் கருதுகின்றோம். நம்பகத்தன்மையின் அடிப்படையில் ஐ.நா.வுக்குக் கொடுக்கப்பட்ட சாட்சியங்களை இலங்கை அரசிடம் ஐ.நா. கையளித்தமை இதற்கு முதலாவது காரணம்.
பொறுப்புக் கூறல் பொறிமுறை தொடர்பில் உறுதியான தீர்மானங்கள் எதனையும் எடுக்காதது இரண்டாது காரணம். எனவே எதிர்காலத்தில் ஐ.நா.வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் கொடுக்கும் சாட்சியங்கள் – அதனை வழங்கியவர்களின் அனுமதியின்றி எந்தக் காரணத்தை முன்னிட்டும் இலங்கை அரசுக்கு கையளிக்கப்படாமலிருப்பதை ஐ.நா. உறுதிப்படுத்த வேண்டும்.
குற்றவாளிகளிடமே ஆதாரங்களைக் கையளிப்பது சாட்சியமளித்தவர்களின் உயிர்களுக்கே ஆபத்தானதாகலாம். அத்துடன், அவ்வாறானவர்கள் எதிர்காலத்தில் சாட்சியங்களையோ ஆதாரங்களையோ வழங்க தயங்குவார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவும், அதற்குப் பொறுப்புக் கூறப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவுமே 13 வருடகாலமாக உறவுகள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டத்தில் 320 க்கும் அதிகமான உறவுகள் வயது மூப்பின் காரணமாகவும், நோய்களாலும் மரணமடைந்திருக்கின்றார்கள்.
மற்றவர்கள் உறுதியாகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உபாயமாக இலங்கை அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஐ.நா. துணைபோகக்கூடாது என்பதை நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
தற்போதைய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது மேற்கு நாடுகள் மற்றும் ஐ.நா. என்பவற்றின் நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம். அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது அவர்களுடைய திட்டமாக இருக்கலாம்.
ஆட்சி மாற்றத்துக்கான சூழல் இன்னும் உருவாகவில்லை என்பது கள யதார்த்தம். அதற்கான வாய்ப்பை அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். இவ்வாறு காத்திருப்பது காலங்கடத்தப்படுவதற்கான வாய்ப்பை இலங்கை அரசுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதாக அமைந்துவிடும். அடுத்துவரும் மாதங்களில் மீண்டும் பின்னோக்கி வரமுடியாத ஒரு நிலைக்கு இலங்கை அரசு இந்தப் பிரச்சினையைகொண்டுபோய் நிறுத்திவிடும்.
ஐ.நா.வின் தற்போதைய அணுகுமுறை இலங்கையின் இந்தப் போக்கை தடுத்து நிறுத்துவதாக அமையவில்லை. அதனால், ஐ.நா.வும் மேற்கு நாடுகளும் இலங்கை குறித்த தமது அணுகுமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ள வேண்டும்.
போலியான கருத்துக்களை மேற்குநாடுகள் முன்வைக்கின்றன. சர்வதேச நீதிமன்றத்தை வைத்து போர்க் குற்றங்கள் குறித்த சில வழக்குகளை கையாளலாம் என அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், இலங்கையில் போர்க் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் எங்குமே நிரந்தரமாக நிலைகொண்டிருக்கமாட்டார்கள்.
அதனால், சர்வதேச சட்டத்தை பயன்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சிரமமானதாகவே இருக்கும். இவ்வாறு ஒரே ஒரு நடவடிக்கைதான் இவர்களால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. அது – ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒருவரை கைது செய்தார்கள். தமிழ்த் தரப்பில் உள்ளவர்களைத்தான் இவர்களால் கைது செய்ய முடியும்.
உண்மையான போர்க் குற்றவாளிகளை இவர்களால் இலக்குவைக்க முடியாது. ஏனெனில் இலங்கை அரசு தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு சூழலில்தான் அப்போதிருந்து தந்திரோபாயமாக செயற்பட்டுவருகின்றது. அதனால், ஐ.நா. தரப்பு சொல்கின்ற விடயங்கள் எதுவும் எமக்கான தீர்வாக அமையப்போவதில்லை.
ஆகவே இன அழிப்பு நடைபெற்றுள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை வெறுமனே போரின்போது இடம்பெற்ற ஒரு சம்பவமல்ல.
இது திட்டமிடப்பட்ட ஒரு இனஅழிப்பு. காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பார்க்கும் போது 14 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகவே அவர்கள் உள்ளனர். இவர்கள் ஆயுதச் செயற்பாடுகளில் சம்பந்தப்பட்டவர்களாக இருந்திருப்பின் அவர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
ஆனால், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை ஒரு சந்ததியை அப்படியே இல்லாமல் செய்வதற்கான திட்டமிடப்பட்ட செயற்பாடு எனக் கருதுவதற்கு காரணம் உள்ளது. குறிப்பிட்ட வயதில் உள்ளவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி அவர்களை நாட்டைவிட்டு வெளியேறச்செய்வதும் இலங்கை அரசின் உபாயமாக இருந்துள்ளது.
இதன்மூலம் திட்டமிட்ட இனக்குறைப்பைச் செய்வதுதான் அரசின் நோக்கம். அதனால், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையை உள்நாட்டுப்பொறிமுறை மூலமாகத் தீர்க்கலாம் என நினைப்பது ஆபத்தான ஒரு போக்காகும். இதனைப் புரிந்துகொண்டு இந்தப் பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான செயற்பாடுகளை மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் அட்டவணை -2 க்குள் தான் இருந்துவருகின்றது. அதாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கையிடல் என்பதற்குள் வைத்துத்தான் இது கையாளப்படுகின்றது. இதற்குள் வரும்போது சம்பந்தப்பட்ட நாடுகளின் இணக்கத்துடன்தான் எதனையும் செய்ய முடியும்.
ஆனால், உலகில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல் பிரச்சினைகள் அட்டவணை 4 என்ற நிகழ்ச்சிநிரலுக்குள் வைத்துத்தான் கையாளப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளின் அனுமதி இல்லாமலேயே சில செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும். அதனால், மனித உரிமைகள் பேரவை இலங்கை விவகாரத்தை அட்டவணை 4 இல் வைத்து கையாள வேண்டும்.
அல்லது நிரந்தரமான ஒரு நிகழ்ச்சி நிரல் இலங்கைக்காக என உருவாக்கப்படவேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்களை தடுக்க முடியாததாக ஐ.நா. இருந்துள்ளது என்பதாலும், தொடர்ச்சியாக தீர்மானங்களை கொண்டுவந்தும் எதுவும் நடைபெறவில்லை என்பதாலும் நிரந்தரமான ஒரு நிகழ்ச்சி நிரலைக்கொண்டுவருவதுதான் இலங்கை விவகாரத்தைக் கொண்டுவருவதற்குப் பொருத்தமானதாக இருக்கும்.
இனப்படுகொலை நடைபெற்றதா என்பதை கண்டறிவதற்காக மியன்மாருக்கு நியமித்ததைப்போல உண்மைகளைக் கண்டறிவதற்கான குழு ஒன்றை அவர்கள் நியமிக்க வேண்டும். அல்லது விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். இனப்படுகொலை நடைபெற்றதா என்பதைக் கண்டறிவதற்கான ஆணை அதற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்றைக்கொண்டுவருவதற்கான உபாயமாகத்தான் ஜெனீவா தீர்மானங்கள் அமைந்திருக்கின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள்தான் இடம்பெற்றுவருகின்றன. ஆட்சி மாறிய பின்னர் அந்த அழுத்தங்களைத் தளர்த்திக்கொள்வது வழமையாகவுள்ளது.
அதனால், மனித உரிமைகள் பேரவையின் பிடியிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்ள முடியாத வகையில், அட்டவணை 4 க்குள் இலங்கை விவகாரத்தை கொண்டுவர வேண்டும். அல்லது இலங்கை குறித்து தனியான ஒரு நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்பட வேண்டும்.
இதன்மூலமாக மட்டுமே மனித உரிமைகள் பேரவை மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதுடன், பாதிக்கப்பட்ட தரப்பாகவுள்ள ஈழத் தமிழர்களுக்கு நீதியையும் பெற்றுத்தரக்கூடியதாக இருக்கும் என்பதை வலியுறுத்துகின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.