ஜனாதிபதி மீது கடும் சீற்றத்தில் மக்கள்!

0
379

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மக்கள் தமது கோபத்தை வெளிக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி வாகனத்தில் இருந்து கை அசைத்த போது மக்கள் “இப்போது சுகமா” என கோஷமிட்டனர். நாட்டின் ஜனாதிபதி ஒருவர் தொடர்பில் மக்கள் இவ்வாறு நடந்துக்கொண்டது இதுவே முதல் முறை. இதுதான் மக்களிடம் இருந்து வெளிப்படும் கோபம்.

பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலைமை முற்றி வருகிறது.

அரசியல் கட்சிகளையும் மீறி புரட்சி ஏற்படும் என்று புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை வழங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

அந்தளவுக்கு நாட்டு மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். 450 கிராம் பால் மாவின் விலையை நேற்று 250 ரூபாவால் அதிகரித்தனர். இதனால், குழந்தைகளுக்கே பாதிப்பு. பால் குடிக்கும் குழந்தைகளை அரசாங்கம் தாக்குகிறது.

எமது அரசாங்கத்தின் காலத்தில் 450 கிராம் பால் மாவின் விலை 245 ரூபாயாக இருந்தது. அந்த விலைக்கு நிராகவே தற்போது விலை அதிகரிக்கின்றது.

அதேபோல் மருந்துகளின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளது. மக்களுக்கு உணவை போலவே வாழ்வதற்கு தேவையான மற்றைய பொருள் மருந்து.இதனால், மருந்துகளின் விலைகளை அதிகரித்தமை மனித நேயமற்ற செயல்.

அரசாங்கம் தலையிட்டு மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும். இதனை விட மருந்து தட்டுப்பாடு என்பது மிகவும் மோசமான நிலைமை. அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திலும் சுமார் 250 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர் என ஜனாதிபதி கூறுகிறார். அப்படியானால், அவரது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தில் எப்படி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படும். மருந்துக்கு பொறுப்பான அமைச்சர் இந்த செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தினாரா?.

துறை சம்பந்தப்பட்ட விடயங்களை அறியாது அமைச்சர்கள் கருத்து வெளியிடுகின்றனர். இதனால், பொது மக்களின் கோபம் மேலும் அதிகரிக்கும். தற்போது விலை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும் எமது அரசாங்கத்தின் கீழ் நாங்கள் விலை கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடுகளை கொண்டு வருவோம் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.