பயங்கரவாத தடைச் சட்டம் பொருந்தாது! மாத்தறையில் இடம்பெற்றகையெழுத்து போராட்டம்

0
545

நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது பொருந்தாது என்றும் அதனை முற்றாக நீக்கி தற்போதைய நிலைமைக்கு பொருந்தும் வகையில் மனித சுதந்திரத்தை பாதுகாக்கும், மனித உரிமைகளை காக்கும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலமொன்றையோ அல்லது அதனை ஒத்த வேறு சட்டமூலமொன்றையோ கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் இருப்பது விமர்சன கருத்துக்களை பொறுக்க முடியாத பழிவாங்கும் சட்டமூலம் என்பதுடன் இதன் மூலம் பழிவாங்கல் மற்றும் சந்தர்ப்பவாதமே மேலோங்கும் என்றும் எனவே இதனை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாத ஒழிப்பு திருத்தச்சட்டமூல வரைபுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள கையெழுத்து பெறும் போராட்டம் நேற்றைய தினம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. 

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஆதரவு வழங்கியதோடு பயங்கரவாத சட்ட மூலத்திலுள்ள குறைப்பாடுகள் தொடர்பிலும் அதனை நீக்கி புதிய சட்டமூலத்தை கொண்டு வருவதற்கான அவசியம் குறித்தும் இந்த மனுக் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் கடிதத்தையும் வழங்கினார்.

இந் நிகழ்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண, எரான் விக்ரமரட்ண உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இதில் எதிர்க்கட்சிக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், முற்போக்குக் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தத்தமது கையெழுத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.