கோட்டபாய ராஜபக்ஷக்கு கேள்வி கணைகளை தொடுத்துள்ளபொருளாதார நிபுணர் ஹர்ஷ டி சில்வா !

0
360

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று ஆற்றிய உரையினை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா காரசாரமான கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது தலைவரின் நல்ல நடவடிக்கையாக பாராட்டப்படுகிறது. ஜனாதிபதி தனது உரையில், நெருக்கடி நிலையை ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டதாக கூறினார், ஆனால் அதைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் பின்னர், ஹர்ஷ டி சில்வா தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில்,

“அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்றிய உரையை நான் கேட்டேன். சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் நான் இதை எழுதுகிறேன்.

இந்த நெருக்கடியை நீங்கள் முன்பே அடையாளம் கண்டதாக கூறினீர்கள். எனவே வாகன இறக்குமதியை நிறுத்தி அந்நிய செலாவணியை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், இப்படி ஒரு நெருக்கடியை நீங்கள் கண்டால், அரசியல் பிரபலத்தை பெறுவதற்காக வரிகளை குறைத்து சுமார் 600 பில்லியன் ரூபாய் வரி வருவாயை ஏன் இழந்தீர்கள்?உலகிலேயே மிகக் குறைந்த அரசாங்க வருமானம் கொண்ட நாடான இலங்கையில் அரச வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்தமையே நெருக்கடியின் ஆரம்பம். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பதாகவும், அதன் மூலம் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கலாம் என்றும் கூறியிருந்தீர்கள். நீங்கள் கூறுவதனை போன்று நெருக்கடியை முன்கூட்டியே அறிந்திருந்தால் ரூபாயை செயற்கையாக கட்டுப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கியது ஏன்?

இதன் விளைவாக நாடு சுமார் 4 பில்லியன் டொலர் வருவாயை இழந்தது உங்களுக்குத் தெரியுமா? ரூபாயை பாதுகாப்பதற்காக சுமார் 1.5 பில்லியன் டொலர்கள் எரிக்கப்பட்டுவிட்டது என கூறலாம். மேலும், ரூபாயின் செயற்கையான கட்டுப்பாட்டின் காரணமாக நாடு சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணிகளை இழந்துள்ளது. அப்படித்தான் அந்நியச் செலாவணி நெருக்கடி நீடித்தது ஜனாதிபதி அவர்களே.

இந்த நேரத்தில் நாட்டிற்காக மக்கள் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டீர்கள். மக்கள் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு கூட எரிபொருளை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுபுறம், இவ்வாறு நெருப்பு விலையில் எரிபொருள் பெற்றுக் கொண்டு மக்களை அதனை வீணடிப்பதாக நினைப்பது தவறு.

மேலும், எரிபொருளும் மின்சாரமும் ஒரு பொருளாதாரத்தின் உந்து சக்திகளாகும். வாடகை வாகனம் ஓட்டும் நபர் எப்படி எரிபொருளை சிக்கமான பயன்படுத்த முடியும்? ஹயர்களை குறைத்து தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் அவருக்குத் தேவையான ஆதரவை நீங்கள் வழங்க வேண்டும். அதாவது அவரது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.

முழுமையான நாடு என்ற ரீதியில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிந்து விடும். எவ்வாறாயினும், இந்த சந்தர்ப்பத்தில் தேசத்திற்கு உரையாற்றியதற்காகவும், மக்களின் பலத்தை உயர்த்துவதற்கான உங்கள் முயற்சிகளுக்காகவும் நாட்டின் தலைவர் என்ற முறையில் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். ஒரு தலைவராக இது ஒரு நல்ல விடயம். ஆனால், பொறுப்பற்ற பொருளாதார நிர்வாகத்தால் இந்தப் பிரச்சனைகள் ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறுகளை நீங்கள் நிராகரிக்க முடியாது.

கடன்களை மீளச் செலுத்துவதற்கான வழிமுறையை உருவாக்க சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அது நல்ல விடயம்தான். ஆனால் கேள்வி என்னவென்றால், நெருக்கடியை முட்கூட்டியே அறிந்திருந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் இவ்வளவு தாமதம்?

பொருளாதார நிபுணர்கள் 18 மாதங்களுக்கு முன்னரே நாடு இவ்வாறானதொரு நெருக்கடிக்குள் தள்ளப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து தீர்வுகள் காணப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இன்று நீங்கள் எடுக்கப்போகும் தீர்மானம் அன்றே எடுக்கப்பட்டிருந்தால், மக்கள் இப்படி ஒரு நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்காது ஜனாதிபதி அவர்களே.” என அவர் பதிவிட்டுள்ளார்.