இலங்கையில் இனப்படுகொலை ஒருபோதும் இடம்பெறவே இல்லை:- அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

0
367

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது எனவும் அவ்வாறு எதுவுமே இங்கு நடக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“பயங்கரவாதிகளிடம் சிக்கிய மக்களை மீட்கவே நீதியான முறையில் போர் முன்னெடுக்கப்பட்டது. மாறாக இனப்படுகொலை இடம்பெற்றது என்றெல்லாம் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.

வெளிநாடுகளில் சம்பளம் வாங்கும் தரப்பொன்றே அவ்வாறான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றது. தமிழ் டயஸ்போராக்கள்தான் இலங்கைக்கு எதிராகப் பிரசாரம் செய்கின்றனர் எனக் கூறப்படுவது தவறு.

தமிழ் டயஸ்போராக்களில் புலிகளின் கருத்தியலுடன் இருக்கும் சிறு தரப்பொன்றே இவ்வாறான செயற்படுகளில் ஈடுபடுகின்றது. அவர்கள் வீதியில் போராடுவதால் பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை. இந்நிலைமையும் தற்போது மாறி வருகின்றது.

மேலும் ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்தவுள்ளார். அது சிறந்த ஆரம்பமாக அமையும் என நம்புகின்றோம் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.