ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது!- மக்கள் விடுதலை முன்னணியினர் விமர்சனம்

0
363

சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

ஆனால் கடந்த காலத்திலும் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க மஹிந்த ராஜபக்ஷ அணியினரும் இவ்வாறே ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்தனர் என மக்கள் விடுதலை முன்னணியினர் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.

அதன்போது மஹிந்த அணியினர் குடித்துவிட்டு நடனமாடி, அரசியல் பிரச்சாரங்களை செய்து மக்களை முட்டாள்கள் என நினைத்து அவர்களை ஏமாற்றும் வேலையினையே செய்தனர்.

அவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதியை நம்பியே ராஜபக்ஷவினரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர மக்கள் ஆதரவும் வழங்கினர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

கொழும்பை முடக்கும் வகையில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஐக்கிய மக்கள் சக்தி நேற்று முன் தினம் முன்னெடுத்திருந்தனர். இதில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் தமது ஆவேசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தனர்.

அத்துடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது என்ற தகவலொன்றையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மதுபானங்களை வழங்கி, ஆதரவாளர்களை ஆடவிட்டு, சஜித் பிரேமதாசவின் அரசியல் பிரச்சாரத்தை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர உண்மையில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

ஆகவே எம்மை பொறுத்தவரையில் ராஜபக்ஷவினரும், சஜித் தரப்பினரும் ஒரே செயற்பாட்டில் தான் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை காலமாக இவர்கள் இரண்டு தரப்பினரும் வெவ்வேறு பெயர்களில் ஆட்சி செய்துள்ளனர்.

இந்த இரண்டு தரப்பும் தமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுத்த தவறான தீர்மானங்கள் காரணமாகவே இன்று நாடு பாதாளத்தில் விழுந்துள்ளது. அதனால் தான் மக்கள் ஒட்டுமொத்தமாக வீதிக்கு இறங்கி தமது அன்றாட வாழ்க்கைக்காக போராடும் நிலைமை உருவாகியுள்ளது.

எனவே இவர்கள் இனியும் மாறி மாறி ஆட்சி அமைப்பதினால் நாடு கட்டியெழுப்பப்பட போவதில்லை என்பதை மக்களே இனிமேல் விளங்கிக்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.