தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்ல-அகில இலங்கை பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பிரயன்ஜித் தெரிவிப்பு

0
448

தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்ல. அதனால் மூன்று தினங்களுக்கு பஸ் சேவையில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் நட்டத்தை சுமக்க முடியாதுபோனால் எமது தீர்மானத்தை எதிர்வரும் 3 தினங்களில் அரசாங்கத்துக்கு அறிவிப்போம் என அகில இலங்கை பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பிரயன்ஜித் தெரிவித்தார்.

தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் பஸ் கட்டணம் தொடர்பாக தனது சங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டு பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் கட்டணம் மூலம் நாங்கள் நாளாந்தம் எரிபொருளுக்காக செலவிடும் தொகையை கூட பெற்றுக்கொள்ளமுடியாது. இவ்வாறு பயணிகள் போக்குவரத்து சேவையை தொடரமுடியாது. இதனால் பஸ் சேவையை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை நிறுத்தமுடியாது.

பஸ் உரிமையாளர்களுக்கு தங்களுக்கு கீழ் பணி புரியும் ஊழியர்கள் இருவருக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கு தேவையான எரிபொருள் சிபெற்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இல்லை.

அதனால் அதிகமான பஸ்கள் வீதி ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று பஸ் கட்டண அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பது லங்கா ஐ.ஓ,சி, நிறுவனத்தின் எரிபொருள் விலைக்கு அல்ல. மாறாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை உயர்வுக்கு அமைவாகும் என்பதை அமைச்சருக்கு தெரிவிக்கின்றோம்.

அத்துடன் நாங்கள் பஸ் கட்டண அதிகரிப்பை அரசாங்கத்திடம் கோரவில்லை. மாறாக எரிபொருள் நிவாரணமே கோரி இருந்தோம். பஸ் சேவையில் ஈடுபடுவதற்கு ஒரு லீட்டர் டீசலை 121 ரூபாவுக்கு வழங்குமாறே நாங்கள் கோரி இருந்தோம்.

என்றாலும் போக்குவரத்து அமைச்சர் சிறியதொரு பஸ் கட்டணமாக அதிகரித்து பஸ் உரிமையாளர்களை ஏமாற்றிவிடவே நடவடிக்கை எடுத்திருக்கி்ன்றார். பஸ் டயர் ஒன்றின் விலை 35 ஆயிரம் ரூபாவை தண்டி இருக்கின்றது.

அப்படி இருக்கும்போது எவ்வாறு இந்த தொழிலை முன்னுக்கு கொண்டுசெல்வது? அதனால் தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணத்தின் அடிப்படையில் எதிர்வரும் 3 தினங்களுக்கு சேவையில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் நட்டத்தை எம்மால் சுமக்க முடியாமல்போனால் மூன்று தினங்களில் நாங்கள் எமது தீர்மானத்தை அரசாங்கத்துக்கு அறிவிப்போம் என்றார்.