கொரோனா கட்டுக்குள் வராவிட்டால் கேரளாவில் மீண்டும் ஊரடங்கு

0
551

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு, சராசரியாக, 5,000க்கும் அதிகமாக உள்ளது. நேற்று, 5,266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நோய் பரவல், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையினர் விளக்கமளித்தனர்.

கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தாமல் கல்வி நிலையங்கள் திறக்க கூடாது. கூடுதல் தளர்வுகள் அளிக்கக்கூடாது. தியேட்டர்களில், 100 சதவீத இருக்கை பயன்பாடு உட்பட, மத்திய அரசின் தளர்வுகளை கேரளாவில் நடைமுறைப்படுத்த இயலாது. கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.

பஸ்களில், 50 சதவீதம் பயணியர், அலுவலகங்களில், 50 சதவீதம் ஊழியர்கள், ஓட்டல்களில், 50 சதவீதம் இருக்கை மட்டும் அனுமதிக்க வேண்டும். சுற்றுலா பகுதிகளில் கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும்.’கேரளாவில் பரவும் கொரோனா வீரியமிக்கது’ என, நான்கு மாதங்களுக்கு முன் சுகாதாரத்துறை எச்சரித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படவில்லை.

திருமணம் உட்பட பொது நிகழ்ச்சிகளில், 100 பேர் பங்கேற்க வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவில்லை என்றால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர்.