இலங்கையின் கொரோனா நிலைவரம் ! இதுவரை 37 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

0
496

இலங்கையில் நாளாந்தம் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருகிறது. ஒரு வருடத்தில் சுமார் 60 000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 29 ஆம் திகதி முதல் இலங்கையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 30 000 இற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய முதல் நாளான ஜனவரி 29 ஆம் திகதி 5286 பேருக்கும் , இரண்டாம் நாளான 30 ஆம் திகதி சனிக்கிழமை 32 539 பேருக்கும் ஒட்டுமொத்தமாக 37 825 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 000 ஐ கடந்துள்ளது. இவர்களில் 24 406 தொற்றாளர்கள் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இரண்டாம் அலையின் பின்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இனங்காணப்பட்டவர்களாவர்.

இதே போன்று கம்பஹா மாவட்டத்தில் 13 020 தொற்றாளர்களும் , களுத்துறையில் 4919 தொற்றாளர்களும், கண்டியில் 3226 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி வரை 351 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 63 644 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 57 159 பேர் குணமடைந்துள்ளதோடு 6172 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பகுதிகள்

நாளை திங்கட்கிழமை காலை 5 மணி முதல் நாரஹேன்பிட்ட பொலிஸ் பிரிவில் 100 ஆவது தோட்டம் , கொழும்பு துறைமுக பொலிஸ் பிரிவில் புனித அன்றூஸ் மேல் மற்றும் கீழ் பிரிவு, அன்றூஸ் வீதி, பேலியகொடை பொலிஸ் பிரிவில் கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவில் 90 ஆவது தோட்டம் என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

சனியன்று பதிவான மரணங்கள்

நேற்று சனிக்கிழமை கொவிட் தொற்றினால் 8 மரண்ங்கள் பதிவாகியுள்ளன. அதற்கமைய நாட்டில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 313 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு 10 ஐ சேர்ந்த 61 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா , நீரிழிவு நோய் தீவிரமடைந்தமை மற்றும் இதய நோய் நிலைமை மரணத்திற்கான காரணமாகும்.

கொழும்பு 15 ஐ சேர்ந்த 52 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, ஈரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை நீரிழிவு நோய் என்பன இவரது மரணத்திற்கான காரணமாகும்.

பொக்குனுவிட பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்னொருவர் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றால் இதயம் உயிரிழந்தமை மரணத்திற்கான காரணமாகும்.

இராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா , நீரிழிவு நோய் தீவிரமடைந்தமை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் மரணத்திற்கான காரணமாகும்.

கொழும்பு 15 ஐ சேர்ந்த 93 வயதுடைய ஆணொருவர் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலை அவரது உயிரிழப்பிற்கான காரணமாகும்.

மடுவல பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் நிமோனியாவுடன் இதயம் செயழிலந்தமையுமாகும்.

வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இரத்தம் நஞ்சானமை, கொவிட் நிமோனியா நிலை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

கொழும்பு 12 ஐ சேர்ந்த 63 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று கண்டறியப்பட்டதால் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அங்கு நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமை , இரத்தம் நஞ்சானமை மற்றும் சிறுநீரகம் செயழிரந்தமை மரணத்திற்கான காரணமாகும்.