ரசிகர்களுக்கு சிலம்பரசன் விடுத்த வேண்டுகோள்

0
516

சிலம்பரசன் தனது பிறந்தநாளை வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. அந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். மேலும் அவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் மாநாடு திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியானது. இதில் சிம்புவின் மாறுபட்ட தோற்றம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிம்புவின் பிறந்தநாள் நெருங்கி வருவதால் அதனை விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். வழக்கமாக பிப்ரவரி 2 ஆம் தேதியன்று சிம்பு தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பிறந்தநாளை கொண்டாடுவார். மேலும் அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டு வந்து சிம்புவை நேரில் பார்த்து வாழ்த்து தெரிவிப்பார்கள்.

ஆனால், இந்த ஆண்டு தவிர்க்க முடியாத காரணங்களால் தனது பிறந்தநாளன்று வெளியூர் செல்ல இருப்பதாகவும், அதனால் ரசிகர்கள் தனது வீட்டிற்கு வர வேண்டாம் எனவும் சிம்பு தெரிவித்துள்ளார்.