அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) பதவியேற்றுக் கொண்டார். 58 வயதாகும் இவர் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தின்போது வெளிவிவகார இணையமைச்சராகவும், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
அவரது நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, அவர் வெளிவிவகார அமைச்சராகப் பதவிப் பிராணம் செய்துகொண்டார்.
இது தொடர்பாக செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், அவரது நியமனத்துக்கு ஆதரவாக 78 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் பதிவாகின.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நீண்ட கால உதவியாளரான ஆன்டனி பிளிங்கன், ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையால் பிற நாடுகளுடனான உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பைடனின் திட்டத்தை நிறைவேற்ற உதவுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.