இலங்கையின் கிழக்கு முனையத்தை விற்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும்: ஒமல்பே சோபித தேரர்

0
501

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்வது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை வெளிநாட்டு சக்தியொன்றிடம் ஒப்படைப்பது தேசிய பாதுகாப்பினை பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக துறைமுகங்கள் தனியான இடங்களில் அமைந்திருந்த போதிலும் கொழும்பு துறைமுகம் நாட்டின் முக்கியமான இடங்களுக்கு அண்மித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, பொலிஸ் தலைமையகம் மற்றும் இராணுவத் தலைமையகம் என்பன கொழும்பு துறைமுகத்தை அண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒர் இடத்தின் 49 வீத உரிமையை வெளிநாடு ஒன்றுக்கு வழங்குவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் நாட்டுக்கு துரோகம் இழைக்கக் கூடாது எனவும் மக்களின் கருத்துக்கு செவிமடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு முனையம் தொடர்பில் தூர நோக்குடன் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.