இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத விநியோகம்! இலங்கையர்கள் உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

0
435

விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதிரிபாகம் தயாரித்து கொடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தலைமறைவாக உள்ள மூவருக்குப் பிணை வழங்க முடியாத பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை 6ஆவது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து கோவை மாநகர கியூ பிரிவு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ரவிசந்திரன், இலங்கையர்களான கிளியன் அல்லது கிளியண்ணன், விடுதலைப் புலிகளில் பணியாற்றிய நரேந்திரன் அல்லது பழனியப்பன் ஆகியோருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரன் கலிக்கநாயக்கன்பாளையத்தில் ஆயுத பாகங்களை தயாரித்துள்ளார். கிளியனும், நரேந்திரனும் இவற்றை விடுதலைப் புலிகளுக்கு விநியோகித்துள்ளனர்.

ரவிச்சந்திரன் 1989 இல் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனினும், இலங்கை பிரஜைகள் கைது செய்யப்படவில்லை. குறித்த மூவரும் எதிர்வரும் மார்ச் 1, 2021 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இந்நிலையில், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் காவல்துறைக்கு 0422-2309000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.