யுத்தம் என்றால் சில மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம் : இலங்கை அரசு!

0
481

யுத்தம் என்றால் சில மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம். அப்படி நடந்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நியாயம் செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கிறது என தெரிவித்துள்ளார் அமைச்சரவை  பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட்டின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் ஒரே அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் தொலைகாணொளிவழி ஊடக சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பணியாற்றிய காலத்தில், அங்கு முன்வைக்கப்பட்ட பிரேரணையின்போது, தலைவர் அறிவிக்கும் சந்தர்ப்பத்தில் நன்றாக அதனை செவிமடுத்து, இறுதியில் அவர் தமது கருத்தை தெரிவித்தார். அரசாங்கம் சில உண்மைகளை ஏற்றுக்கொண்டாலும், அது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு அரசியலமைப்பு விதிகள் இல்லை என்று அவர் மிகத் தெளிவாகக் கூறினார். ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்ற வகையில் எங்களுக்கு அந்த உரிமை உண்டு” என்றார்.

அந்த உரிமையானது, அரசாங்கம் என்ற அடிப்படையில், இறையாண்மையுள்ள நாடு என்ற அடிப்படையில் எம் அனைவருக்கும் இருக்கின்றது.

ஆகையினால், அவரது அறிவிப்பு எவ்வாறாயினும், அது எமது அரசியலமைப்பு ரீதியான பின்னணியிலும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் செயற்படக்கூடிய வகையில் தொடர்புபட வேண்டும்.

ஒரு அரசாங்கமாக நாட்டு மக்களின் இறையாண்மையை உறுதிப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எனவே இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் போது அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்களின் இறையாண்மை குறித்து நாம் சிந்திக்க வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.

இதேநேரம், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனா என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு தொடர்பிலும், இதன்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கேள்வி எழுப்பப்பட்டது

இதன்போது பதிலளித்த அவர், யுத்தம் எனும்போது அல்லது தீவிரவாத செயற்பாடுகளின்போது சிற்சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

அவ்வாறு இடம்பெற்றிருந்தால், அவை தொடர்பில் நியாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தெளிவாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில், சரியான தீர்மானங்களை மேற்கொண்டு. எவருக்காவது ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அந்த பாதிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.