பேஸ்புக் நிறுவனம் பிரித்தானியாவில் இன்று முதல் ‘பேஸ்புக் நியூஸ்’ எனும் பிரத்தியேக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக் உலகம் முழுவதும் குறைந்தது 2.7 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் பல சேவைகளை வெற்றிகரமாக வழங்கிவருகிறது.
இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு அதன் சொந்த நாடான அமெரிக்காவில், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப செய்திகளை வழங்கும் சேவையை தொடங்கியது. இதன் மூலம் 95%க்கும் அதிகமான ட்ராஃபிக் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனம் இந்த சேவையில் இப்போது பிரித்தானியாவை தனது இரண்டாவது பெரிய சந்தையாக பார்க்கிறது.
இன்றுமுதல் ‘Facebook news’ எனும் அதன் பிரத்தியேக சேவையை பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது.
இதற்காக கார்டியன், எகனாமிஸ்ட் மற்றும் நூற்றுக்கணக்கான உள்ளூர் தளங்களை உள்ளடக்கி ஏற்கேனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிகமாக, சேனல் 4 நியூஸ், டெய்லி மெயில் குரூப், டி.சி தாம்சன், பைனான்சியல் டைம்ஸ், ஸ்கை நியூஸ் மற்றும் டெலிகிராப் மீடியா குழுமத்துடன் புதிய கூட்டாண்மைகளை பேஸ்புக் அறிவித்தது.
பேஸ்புக்கின் வழிமுறையால் தீர்மானிக்கப்பட்டபடி, ஒவ்வொரு வாசகரும் அவர்களின் நலன்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய தினசரி செய்திகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட செய்திகளின் கலவையை பெறுவார்கள்.