இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் கடந்த 22-ஆம் திகதி நடைபெற்றது/
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதன் பின் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 9 விக்கெட்டுக்கு 339 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
நேற்று 4-வது நாள் துவங்கிய சிறிது நேரத்திலே இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆக,இதனால் முதல் இன்னிங்சில் 344 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 186 ஓட்டங்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் எம்புல்டெனியா 7 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா, ரமேஷ் மென்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதையடுத்து 37 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்ததை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டு அபாரமாக பந்து வீசிய இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜாக் லீச், டாம் பெஸ் ஆகியோர் இலங்கை அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி அளித்ததுடன் விரைவில் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா (14), அடுத்து வந்த ஒஷாடா பெர்னாண்டோ (3), மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் திரிமன்னே (13), முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஏஞ்சலோ மேத்யூஸ் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தினேஷ் சன்டிமால் 9 ஓட்டங்களிலும், விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா 7 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 67 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு தில்ருவான் பெரேரா 4 ஓட்டங்களிலும் ரமேஷ் மென்டிஸ் 16 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனால் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 35.5 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் டாம் பெஸ், ஜாக் லீச் தலா 4 விக்கெட்டும், ஜோ ரூட் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி (13) எம்புல்டெனியா பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த பேர்ஸ்டோ (29), லாரென்ஸ் (2) ஆகியோர் விக்கெட்டையும் வீழ்த்தினார். கேப்டன் ஜோ ரூட் 11 ஓட்டங்களில் ரமேஷ் மென்டிஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார்.
இதனால் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
5-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லியுடன் இணைந்தார்.
இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 43.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 164 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரை வென்றதன் மூலம் இங்கிலாந்து அணி மொத்தம் 120 புள்ளிகளை பெற்றுள்ளது.