1700 ரூபா சம்பளம்: நான் வாக்குறுதி அளிக்கவில்லை – கைவிரித்த ரணில்

0
74

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாவை வழங்குவதாக நான் உறுதிமொழியளிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஊடக பிரதானிகளுடன் இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

”தொழில் அமைச்சின் திணைக்களம் குறித்த தொகையை ஒதுக்கியது. அதற்கு எதிராக சில கம்பனிகள் நீதிமன்றம் சென்றன. தற்போது குறித்த கம்பனிகள் அமைச்சருடன் கலந்துரையாடி வருகின்றன. பழமையான பெருந்தோட்டத்துறை குறித்து என்னிடம் எவரும் கூற வேண்டாம்.

சில கம்பனிகளுக்கு சம்பளத்தை வழங்க முடியும் என்றால் வழங்க முடியாத கம்பனிகளிடமிருந்து நிலத்தை பெற்று சம்பளத்தை வழங்கக் கூடிய கம்பனிகளுக்கு அதனை வழங்குவதுதான் தீர்வு. பெருந்தோட்ட மக்களுக்கு உரிய சம்பளத்தை வழங்க வேண்டும். அவர்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்றனர்.

அந்த மக்கள் வாழும் லயன் அறைகள் உள்ள பகுதிகளை கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளோம். அந்த குத்தகையை ரத்துசெய்துவிட்து குறித்த பகுதிகளை கிராமங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்றார்.

என்றாலும் கடந்த மே முதலாம் திகதி 1700 சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக கொட்டகலையில் இடம்பெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நேரடியாக கலந்து கொண்டு அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.