ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் 1,50,000 ரூபாய் இழப்பீடு பெறலாம்

0
224

ராஜபக்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் 1,50,000 ரூபா இழப்பீட்டை பெறலாம் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும் சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர், நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால், டப்ளியூ.டி. லக்ஷ்மன், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, முன்னாள் ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று விசேட தீர்ப்பொன்றை வழங்கயிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறியதாவது,

”நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு இவர்கள்தான் காரணம் என நாம் ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டோம். கடந்த மூன்று வருடங்களாக இதனை நாம் சுட்டிக்காட்டினோம். ஆனால், எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

வரலாற்று சிறப்புமிக்க தீர்வை வழங்கியுள்ள உயர் நீதிமன்றத்துக்கும் மனுதாரர்களுக்கும் தலைவணங்குகிறோம். நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தியமைக்காக நன்றி தெரிவிக்கிறோம்.

இலங்கையில் 22 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று இந்த 1,50,000 ரூபா இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த மனுதாரர்களுக்கு ராஜபக்சர்கள் உட்பட ஏழு பேரும் 1,50,000 ரூபா செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே ராஜபக்சர்கள் உட்பட குறித்த ஏழு பேருக்கும் எதிராக எவரும் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.” என்றார்.